நாட்டில் வேகமாகப் பரவும் மலேரியா பாதிப்பு; சுகாதார நிபுணர்கள் கவலை

கோலாலம்பூர் :

நாட்டின் சில பகுதிகளில் இவ்வாண்டு மலேரியா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுச் சுகாதார நிபுணர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மலேரியா காய்ச்சலின் திடீர் உயர்விற்கு பருவநிலை மாற்றமும் ஒரு காரணம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2022ஆம் ஆண்டு பதிவான மலேரியா பாதிப்பைவிட, இவ்வாண்டிற்கான எண்ணிக்கை இப்போதே தாண்டிவிட்டடதாகத் தெரிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு 404 பேர் மலேரியா நோய் தாக்கத்திற்கு உள்ளாயினர். ஆனால் இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி கிளந்தானில் 215 பேரும், சாபாவில் 840 பேரும், திரெங்கானுவில் 26 பேரும் மலேரியாவால் பாதிக்கப்பட்டுவிட்டனர்.

இந்த அண்மையப் புள்ளிவிவரங்கள் கவலை அளிக்கக்கூடியவையாக உள்ளன.

நாட்டில் டிங்கி தொற்றுப் பரவலைச் சமாளித்துவரும் அதேவேளையில், மலேரியா பாதிப்பும் அதிகரித்துள்ளதால் அவற்றை சமாளிப்பது பெரும் சவாலாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

‘எல் நினோ’ பருவநிலையால் ஏற்பட்டுள்ள வெப்பமான, வறண்ட வானிலை டிங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை கூடியதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. பெண் கொசு கடிப்பதன் மூலம் மலேரியா பரவுகிறது.

இந்நிலையில் விலங்குகளிலிருந்து மனிதனுக்குப் பரவக்கூடிய மலேரியா நோய் தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விவகாரமாக உள்ளதாய் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக பாதிக்கப்பட்ட குரங்குகளிலிருந்து கொசுக் கடிகள் மூலம் மலேரியா நோய் மனிதர்களுக்குப் பரவுவதால், பாதிக்கப்பட்ட இடங்களில் பெரிய அளவில் ரத்தச் சோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விலங்குகளிலிருந்து மனிதனுக்குப் பரவக்கூடிய மலேரியா நோய்ச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் மலேசியா புதிய மிரட்டலைச் சந்திப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஸாலிஹா முஸ்தபா கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here