கேரித்தீவு, கிழக்குத் தமிழ்ப்பள்ளியில் ‘வாருங்கள் வெற்றியாளர்களே’  2.0

                 எம்.எஸ்.மணியம்

வாருங்கள் வெற்றியாளர்களே எனும் நிகழ்ச்சி கேரித்தீவு கிழக்குத் தமிழ்ப்பள்ளியில் அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி இலாகாவின் அதிகாரி ஸுல்கிப்ளி பின் முகமட் வருகை தந்து ‘வாருங்கள் வெற்றியாளர்களே’ எனும் இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து சிறப்புரையாற்றியதாக பள்ளியின் தலைமையாசிரியர் உதயகுமார் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கேரித்தீவு, மேற்குத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்டிவன் அந்தோணிசாமி, கேரித்தீவு, தெற்குத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி வேலம்மா மாணிக்கமும் கலந்து சிறப்பித்தனர். பெற்றோர்– ஆசிரியர் சங்கத் தலைவர் முருகன் சகாதேவன், பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் முருகையா கருப்பண்ணன், பெற்றோர்– ஆசிரியர் சங்கச் செயலவை உறுப்பினர்கள், பள்ளி மேலாளர் வாரியச் செயலவை உறுப்பினர்கள். ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பணி ஓய்வு பெற்ற முன்னாள் தலைமையாசிரியர்களான அன்பழகன், ( தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி, )  மணிமாறன், (  காடோங் தமிழ்ப்பள்ளி, )   குளுவான் சிங், ( தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி )   மனோகரன், ( தும்போக் தமிழ்ப்பள்ளி )  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கேரித்தீவு, கிழக்குத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வருகையை மேம்படுத்த கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ‘வாருங்கள் வெற்றியாளர்களே’ 1.0 திட்டம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து ‘வாருங்கள் வெற்றியாளர்களே’ 2.0 எனும் இத்திட்டம் இவ்வாண்டும் தொடரப்படுகிறது என்று பள்ளியின் தலைமையாசிரியர் உதயகுமார் தெரிவித்தார்.

மேலும், இவ்வாண்டில் பள்ளிக்கு முழுமையான வருகையைப் பதிவு செய்யும் மாணவர்களுக்குப் பலவிதமான பரிசுகளைத் தட்டிச் செல்லும் வாய்ப்பு காத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். பள்ளியின் கல்விச் சுற்றுலாவில் இலவசமாக பங்கேற்கும் வாய்ப்பு, விவேக வரைப்பட்டிகை (‘டேப்லட்’) ஆகியவை சிறப்பு பரிசுகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக என்று அவர் குறிப்பிட்டார். இத்திட்டம் மாபெரும் வெற்றியடைந்து மாணவர்களின் வருகையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்று அவர்  நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையளித்த கேரித்தீவு மேற்குத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர்  ஸ்டிவன் அந்தோணிசாமி, கேரித்தீவு, தெற்குத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. வேலம்மா மாணிக்கத்திற்கும் பள்ளியின் தலைமையாசிரியர் சிறப்பு செய்து பாராட்டினார்.

மேலும், இந்நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக சேவைக்கு ஓர் ஆராதனையில் பணி ஓய்வு பெற்ற முன்னாள் தலைமையாசிரியர்களான  அன்பழகன்,  மணிமாறன், குளுவான் சிங்,   மனோகரன் ஆகியோரின் சேவையைப் பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது.

இறுதியாக, கோலாலங்காட் மாவட்ட அழைப்பு பள்ளிகளின் மாணவர் நல துணைத் தலைமையாசிரியர்களுக்கும், நெறிவுரைஞர்களுக்கும் நற்சான்றிதழ்களும் நினைவு சின்னமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

பள்ளி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம், முன்னாள் மாணவர் சங்கம், பெற்றோர், மாணவர்கள், அரசு சாரா இயக்கத்தினர், ஆகிய தரப்புகளுக்குத் தலைமையாசிரியர்  உதயகுமார் குணசேகரன் தமது மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here