கடலுக்கடியில் போட்ட சங்கிலி.. சிக்கிய சீன நீர்மூழ்கி கப்பல்.. 55 பேர் பலி?

பீஜிங்: தங்கள் நாட்டு கடல் பகுதியில் வேறு நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கப்பல்கள் செல்வதை தடுக்கும் நோக்கத்தில் சீனாவுக்கு மஞ்சள் கடல் பகுதியில், சங்கிலி பொறி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சங்கிலி பொறியில் சீனாவின் அணுசக்தி நீர் மூழ்கி கப்பலே சிக்கியதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.

உலக வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காவுக்கே சவால் விடுக்கும் வகையில் சீனா தற்போது செயல்பட்டு வருகிறது. அண்டை நாடுகளின் மோதல் போக்கை கடைபிடித்து வரும் சீனா, தென் சீனக்கடல் பகுதியிலும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது. தென் சீனக் கடலின் பெரும்பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால், சீனாவுக்கும் வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே பிரச்சினை உள்ளது.

இந்த கடல் பகுதியில் சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதில் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் முயற்சித்து வருகின்றன. அமெரிக்க போர்க்கப்பல்கள் தென் சீனக் கடலில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றன. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் நேரடியாக மோதல் போக்கை கையாண்டு வருகிறது. இப்படி தொடர்ந்து மோதல் போக்குடன் செயல்படும் சீனா, தங்கள் நாட்டின் கடல் பகுதியில் பிற நாடுகளின் கப்பல் செல்லக்கூடாது என்பதற்காக கடலுக்கு அடியில் சங்கிலி பொறி (chain trap) அமைத்து இருக்கிறது.

சீனாவுக்கும் கொரியாவுக்கும் இடையேயான மஞ்சள் கடல் பகுதியில் தான் இந்த பொறியை சீனா அமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடலுக்கு அடியில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த சங்கிலிகளில் கப்பல்கள் சிக்கினால் அவ்வளவுதான். நீர் மூழ்கி கப்பலின் நடமாட்டத்தை தடுக்கும் நோக்கில் சீனா அமைத்துள்ள இந்த சங்கிலியில் கப்பல்கள் சிக்கினால், அதில் இருந்து மீண்டு வருவது கடினம் ஆகும்.

கடலின் மேற்பரப்புக்கு வருவதற்குள் பல மணி நேரம் பிடிக்கும் என்பதால் கப்பல்களில் பயணிப்பவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதோடு, கப்பலும் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், தான், கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவுக்கு சொந்தமான 093-417 என்ற நீர் மூழ்கி கப்பல், இந்த சங்கி வலையில் சிக்கியதாக டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டன் உளவு தகவலில் இருந்த கசிந்த தகவலை வைத்து இந்த செய்தி வெளியிடப்பட்டதாக டைம்ஸ் தெரிவித்துள்ளது.

தி டைம்ஸ் பத்திரிகையில் இது குறித்து கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி ஆயுதங்களுடன் சென்ற சீனாவிற்குச் சொந்தமான நீர்மூழ்கி கப்பல் இந்த சங்கிலி வலையில் சிக்கி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. ராணுவத்தினரால் வைக்கப்பட்டிருந்த நங்கூரம் மற்றும் இரும்பு சங்கிலியில் நீர் மூழ்கி கப்பல் சிக்கியுள்ளது. கப்பலை மீட்டு கொண்டு வர ஆறு மணி நேரத்திற்கு மேலாகியுள்ளது.

இதற்குள் கப்பலில் உள்ள ஊழியர்களுக்கு ஆக்சிஜன் வழங்கும் அமைப்புகள் செயல் இழந்து போகின. இதனால், நீர் மூழ்கி கப்பலில் இருந்த 21 அதிகாரிகள் உள்பட 55 பேர் பலியாகினர்” என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், சீனா இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்து இருக்கிறது. சீனா ராணுவத்திற்கு சொந்தமான அணுசக்தி நீர்மூழ்கி கப்பல், விபத்திற்கு உள்ளானதாகவும் வெளியாகியிருக்கும் தகவலை உறுதிப்படுத்த தைவான் ராணுவம் மறுத்துள்ளது.

எனவே கப்பல் விபத்துக்குள்ளானதாக வெளியாகும் தகவலில் உறுதியற்ற தன்மை நிலவுகிறது. இதற்கிடையே, சீன அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் விபத்து நடைபெற்று இருந்தால் அணு கசிவு போன்றவற்றால் நீர் மாசுபாடு உள்பட கடுமையான மாசுபாடு ஏற்படலாம் என்று அத்துறை சார்ந்த நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், நீர் மூழ்கி கப்பலில் அணு உலைகளில் ஏற்படும் பாதிப்பு காரணமாக கதிர்வீச்சு போன்றவை ஏற்பட்டு அருகாமையில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here