திருப்பூரில் இடித்து அகற்றப்பட்ட தீண்டாமைச் சுவர்- சாதி ஒழிப்பின் முதல் படி

திருப்பூர்:

தீண்டாமைச் சுவர் இருப்பதாக கிடைத்த புகாரை அடுத்து திருப்பூர் மாவட்ட காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு அச்சுவரை இடித்துத் தள்ளினர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம் முக்கிய சாலை, சூசையாபுரம் ஆகிய பகுதிகளில் தாழ்த்தப்பட்ட, அருந்ததியின மக்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர்.

இம்மக்கள் தங்களது குடியிருப்புப் பகுதியில் நடமாடுவதையும் அவ்வழியே சென்று திரும்புவதையும் விரும்பாத மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தீண்டாமைச் சுவரை எழுப்பியதாகத் தெரிகிறது.

தாழ்த்தப்பட்டவர்கள், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் வசிக்கும் பகுதிகளுக்கு இடையே உள்ள சாலை ஆக்கிரமிக்கப்பட்டு, தடுப்புச் (தீண்டாமை) சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

இதனால் சூசையாபுரம் பகுதியில் இருந்து அரசு நடுநிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டிய மாணவர்கள், நாள்தோறும் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அதன் பேரில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து காவல்துறையின் பாதுகாப்புடன் அந்தச் சுவர் இடித்து அகற்றப்பட்டதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

சுவர் இடிக்கப்பட்டுவிட்டாலும் அப்பகுதி முழுவதும் காவல்துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here