உள்ளே வரும் நேட்டோ? கடல் வழியே நுழையும் இங்கிலாந்து.. களம் மாறுகிறதா இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்?

காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ஆக்ரோஷமான தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க இங்கிலாந்து தனது ‘R08 குயின் எலிசபெத்’ எனும் போர் கப்பலை காசாவை நோக்கி அனுப்ப ஆலோசித்து வருகிறது. ஏற்கெனவே அமெரிக்காவின் போர் கப்பல் தற்போது காசாவுக்கு அருகே நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் இங்கிலாந்தும் போர் கப்பலை அனுப்ப யோசித்திருப்பது நேட்டோ நாடுகள் பாலஸ்தீனத்திற்கு எதிராக ஒன்று திரள்கிறதோ? எனும் கேள்வியை எழுப்பியுள்ளது.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி, யூதர்களை தேடி தேடி வேட்டையாடியது. இதிலிருந்து தப்பியவர்கள் கப்பலில் பாலஸ்தீனத்திற்கு வந்தடைந்தார்கள். இப்படி வரும்போது அவர்கள் பேனர் ஒன்றை கையில் ஏந்தியிருந்தார்கள். அதில், “ஜெர்மனி எங்கள் குடும்பங்களை அழித்துவிட்டது. நீங்கள் எங்கள் நம்பிக்கையை அழித்துவிடாதீர்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. இதான் யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் நுழைந்த வரலாறு. இவர்களுடைய மோசமான நிலையை பார்த்த ஐநா சபை 1947ம் ஆண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவெடுத்தது. இதற்கான வாக்கெடுப்பில் ஐநாவின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது தனிக்கதை.

அதன் பின்னர் 1949 முதல் 1967ம் ஆண்டு வரை இஸ்ரேல் பாலஸ்தீனத்தை மிக தீவிரமாக ஆக்கிரமிக்க தொடங்கியது. தற்போது மிக மிக சொச்சமான அளவில் உள்ள நிலப்பரப்பில்தான் பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த சொச்சமான நிலப்பரப்பில் காசாவும் ஒன்று. சுமார் 25 மைல் நீளமும், 6 மைல் அகலமும் கொண்ட இந்த துண்டு நிலத்தில் சுமார் 23 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த இடத்தை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால் பாலஸ்தீனிய போராளிகள் இதனை தடுத்து வருகின்றனர். எனவே இந்த துண்டு நிலத்தை இஸ்ரேல் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றியிருக்கிறது.

இதற்கு எதிராக குரல் கொடுத்த அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் இந்த அமைப்புகள் வேறு வழியின்றி ஆயுத போராட்டத்தை கையில் எடுத்தன. அப்படிதான் ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. மத்திய கிழக்கின் இரும்புக்கோட்டை என்று சொல்லிக்கொண்டிருந்த இஸ்ரேல் மீது இப்படியான தாக்குதல், அவுதும் காசா எனும் சிறிய பகுதியிலிருந்து தொடுக்கப்பட்டது உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இதனையடுத்து இஸ்ரேல் 5வது நாளாக காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

காசாவை சுற்றி இஸ்ரேல்தான் இருக்கிறது. காசாவுக்கு தண்ணீர், மின்சாரம் என எது வேண்டுமானாலும் அது இஸ்ரேலின் கரிசனம் இல்லாமல் கிடைக்காது. ஆனால் ஹமாஸின் தாக்குதலையடுத்து தற்போது இவையாவும் கட் செய்யப்பட்டுள்ளன. காசா மக்களிடையே குடிநீருக்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் தற்போது 950 காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 5,000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஒருபுறம் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. மறுபுறம் மருந்துகளை கொண்டு வந்த டிரக்குகள் இஸ்ரேல் படையினரால் திருப்பியனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில் மற்றுமொரு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இங்கிலாந்து தனது ‘R08 குயின் எலிசபெத்’ (R08 Queen Elizabeth) என்ற 60 விமானங்களை தாங்கக் கூடிய போர் கப்பலை காசாவை நோக்கி அனுப்ப யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே தற்போது காசாவுக்கு அருகே யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த கப்பலும் போர் விமானங்களை கொண்டிருக்கிறது. தவிர அணு ஆயுதங்களையும் கொண்டு செல்லும் திறன் கொண்டது. இது மத்திய கிழக்கு கடலில் காசாவுக்கு அருகே ஏன் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இப்படி இருக்கையில்தான் இங்கிலாந்து தனது விமானம் தாங்கி போர் கப்பலை காசாவுக்கு அருகே அனுப்ப யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை இப்படி நடந்தால் கடந்த 2011ம் ஆண்டு லிபியாவுக்கு எதிராக நேட்டோ படைகள் ஒன்றிணைந்ததை போல பாலஸ்தீனத்திற்கு எதிராகவும், ஹமாஸ் படைகளுக்கு எதிராகவும் தற்போது நேட்டோ மீண்டும் ஒன்றிணையும் சூழல் உருவாகலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த முறை நேட்டோ காசாவில் காலடி வைத்தால் ஈரான் மூலமாக ரஷ்ய படைகள் நேட்டோவை எதிர்த்து போரிடும். எப்படி இருந்தாலும் இந்த போர் நீண்ட நாட்களுக்கு நடக்கும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here