அல்ஜசீரா செய்தி நிறுவன அலுவலகத்தை மூட இஸ்‌ரேல் கோரிக்கை

ஜெருசலம்:

ஸ்ரேலில் உள்ள அல்ஜசீரா செய்தி நிறுவன அலுவலகத்தை மூடும்படி கோரிக்கை விடுத்திருப்பதாக இஸ்ரேலிய தொடர்பு அமைச்சர் ஷ்லோமோ கார்ஹி கூறியுள்ளார்.

கத்தாரிய செய்தி நிறுவனமான அது, ஹமாஸ் கிளர்ச்சியாளர்களை ஆதரிக்கும் விதமாக சினமூட்டும் தகவல்களை வெளியிடுவதாகவும் அத்தகவல்களால் இஸ்ரேலியத் துருப்பினர்கள் காஸாவைச் சேர்ந்த தாக்குதல்காரர்களுக்கு இலக்காக நேரிடும் என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேலியப் பாதுகாப்பு அதிகாரிகளும் சட்ட வல்லுநர்களும் தமது கோரிக்கையின் அடிப்படையை கவனமாகச் சரிபார்த்ததாக அவர் சொன்னார்.

இன்று மாலை தாம் அந்தக் கோரிக்கையை அமைச்சரவையின் பரிசீலனைக்கு முன்வைக்கவிருப்பதாகவும் அமைச்சர் கார்ஹி குறிப்பிட்டார்.

அல்ஜசீரா நிறுவனமும் கத்தார் அரசாங்கமும் இதுகுறித்து உடனடியாகக் கருத்துரைக்கவில்லை.

“அல்ஜசீரா தொலைக்காட்சி, சினமூட்டும் தகவல்களை வெளியிடுகிறது. காஸாவிற்கு வெளியே துருப்பினரைப் படமெடுத்து வெளியிடுகிறது. இஸ்ரேலியக் குடிமக்களுக்கு எதிரான தகவல்களை வெளியிடும் ஒரு பிரசார ஊடகமாகச் செயல்படுகிறது,” என்று இஸ்ரேலிய ராணுவ வானொலி நிலையத்திடம் கார்ஹி கூறினார்.

ஹமாஸ் அமைப்பின் பேச்சாளர் விடுக்கும் செய்தி அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதாகக் குற்றம்சாட்டிய அவர், இன்றைக்குள் இதை நிறைவேற்ற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால் அவர் அமைச்சரவைக் கலந்துரையாடலைக் குறிப்பிட்டாரா அல்லது தொலைக்காட்சி அலுவலகத்தை மூடுவதைக் குறிப்பிட்டாரா என்று தெளிவாகத் தெரியவில்லை என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here