ஒன்பது ஆட்சியாளர்கள் இணைந்து இன்று 17வது மாமன்னரை தேர்ந்தெடுக்கின்றனர்

கோலாலம்பூர்:

நாட்டின் 17வது மாட்சிமை தங்கிய பேரரசரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆட்சியாளர்கள் மாநாடு இன்று (அக்டோபர் 27) நடைபெறவுள்ளது.

இஸ்தானா நெகாராவில் காலை 10 மணிக்குத் தொடங்கும் சிறப்புக் கூட்டத்தில், ஒன்பது மலாய் ஆட்சியாளர்கள் இணைந்து புதிய பேரரசரை மட்டுமல்ல, புதிய துணை பேரரசரையும் தேர்ந்தெடுக்க தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வார்கள்.

மாண்புமிகு பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 30-ம் தேதியுடன் முடிவடையும் என்பதால், இந்த சிறப்பு கூட்டம் கூடுகிறது.

மாட்சிமை தங்கிய பேரரசர் தேர்தல், ஒன்பது மலாய் ஆட்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட சுழற்சி அடிப்படையில் அமைந்தது.

இந்த சுழற்சியின் முதல் சுழற்சி, 1957 முதல் (மாட்சிமை தங்கிய பேரரசரின் அலுவலகம் நிறுவப்பட்டபோது) 1994 வரை, தேர்தல் பட்டியலில் நெகிரி செம்பிலான் முதலிடத்தில் இருந்தது, அதைத் தொடர்ந்து சிலாங்கூர், பெர்லிஸ், திரெங்கானு, கெடா, கிளாந்தான், பகாங் , ஜோகூர் மற்றும் பேராக் என சுழற்சி முறையில் அவர்கள் பேரரசரை தேர்வு செய்கிறார்கள்.

அரசியலமைப்பு முடியாட்சி முறையை நடைமுறைப்படுத்தும் உலகின் 43 நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும், மேலும் ஒன்பது மலாய் ஆட்சியாளர்களிடையே இந்த சுழற்சி முறையைப் பின்பற்றும் ஒரே நாடு என்ற பெருமையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here