அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிங்கப்பூரில் 10ஆவது மலேசிய – சிங்கப்பூர் தலைவர்கள் இடையிலான சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பயணம் மேற்கொண்டிருந்தபோது அங்கு எஸ்எம்இ கார்ப் – எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மலேசியப் பிரதமருடன் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது மலேசியா – சிங்கப்பூர் இடையிலான மைக்ரோ, சிறு, நடுத்தர தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் இருவழி உறவுகளை வலுப்படுத்துவதற்கான செயல்பாடுகளை உறுதி செய்வதற்கும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எஸ்எம்இ கார்ப் நிறுவனத்தைப் பிரதிநிதித்து அதன் தலைமைச் செயல் அதிகாரி ரிஸால் நைனியும் எண்டர்பிரைஸ் தரப்பைப் பிரதிநிதித்து அதன் தலைமைச் செயல் அதிகாரி லீ சீவான் தெக்கும் கையெழுத்திட்டனர்.

மலேசியா – சிங்கப்பூர் இடையிலான மைக்ரோ, சிறு, நடுத்தர தொழில்துறையினர் மேம்பாட்டில் இவ்விரு நிறுவனங்களின் கூட்டமைப்பை வலுப்படுத்தும் வண்ணம் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது. இரு நாடுகளின் மைக்ரோ, சிறு, நடுத்தர தொழில்துறைகளுக்கு இன்னும் விரிவான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதிலும் இத்துறைகளை நவீனப்படுத்துவதிலும் பயிற்சிகளில் அக்கறை ஙெ்லுத்துவதற்கும் இந்தக் கூட்டமைப்பு அவசியமாகிறது.
இது குறித்துப் பேசிய ரிஸால், அனுபவம், சிறந்த கொள்கை, அறிவு பகிர்வு வாயிலாக மலேசியா – சிங்கப்பூர் குறிப்பாக மைக்ரோ, சிறு, நடுத்தர தொழில்துறையில் பொருளாதார மேம்பாட்டை வளப்படுத்தவும் கூட்டமைப்பை இன்னும் விரிவாக்கவும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் நாங்கள் எண்ணம் கொண்டுள்ளோம் என்றார் அவர்.




















