மாரான்:
வெள்ள முகாமைத்துவத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக, பகாங் மாநில அரசு 31 மில்லியன் ரிங்கிட் செலவில், ஐந்து நிரந்தர நிவாரண மையங்களை அமைக்கவுள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக மாரான், லிப்பிஸ், குவாந்தான், பெக்கான் மற்றும் தெமெர்லோ ஆகிய ஐந்து மாவட்டங்களில் இந்த மையங்கள் கட்டப்படும் என்று அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் கூறினார்.
“எதிர்காலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நிரந்தர நிவாரண மையங்களுக்குச் செல்லலாம் என்றும், கம்போங் லூயிட், மாரானில் முதல் நிரந்தர நிவாரண மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது, என்றும், மீதமுள்ள நான்கு அடுத்த ஓரிரு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்,” என்று அவர் கம்போங் லூயிட் நிரந்தர நிவாரண மையத்தைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த காலங்களில், வெள்ளம் காரணமாக தங்குமிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பள்ளிகள், பொது அரங்குகள், மசூதிகள் மற்றும் கட்டிடங்கள் ஆகியவற்றில் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களாக மாற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்று அவர் மேலும் கூறினார்.