கூலாய்:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு சிங்கப்பூரிலிருந்து அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் ஜோகூருக்குள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு ஜோகூரின் இரண்டு நிலவழி சுங்கத்துறை, குடிநுழைவு, தடைக்காப்பு (CIQ) சோதனைச்சாவடிகளிலும் எதிர்த்திசைத் தடங்கள் பயன்படுத்தப்படவுள்ளன என்று ஜோகூரின் பணிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்புப் பணிக்குழுத் தலைவரான முகமட் ஃபஸ்லி சாலே முன்னர் தெரிவித்திருந்தார்.
ஜோகூர் பாருவின் காஸ்வேயிலும் இஸ்கந்தர் புத்ரியிலுள்ள இரண்டாவது இணைப்பிலும் உள்ள CIQவின் இரு வளாகங்களிலும் சிங்கப்பூரிலிருந்து போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று மாநில அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குள் வருவோர் சந்திக்கக்கூடிய நெரிசலை இத்தகைய எதிர்த்திசைத் தடங்கள் குறைக்க உதவும்,” என்றார் அவர்.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இந்தத் தடங்களில் அக்டோபர் மாதத்தில் முன்னோட்ட நடவடிக்கை நடத்தப்பட்டதாகவும் போக்குவரத்தில் கணிசமான மேம்பாடு தெரிந்ததாகவும் ஜோகூர் மந்திரி பெசார் ஓன் ஹாஃபிஸ் காஸி குறிப்பிட்டிருந்தார்.
ஆண்டிறுதி விழாக்காலத்தின்போது மலேசியாவுக்குள் வாகனவழி செல்லும் பயணிகள் குடிநுழைவு அனுமதி பெற மூன்று மணி நேரம் வரை காத்திருக்க நேரும் என்று டிசம்பர் 19ஆம் தேதியன்று சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.
நீண்ட வார இறுதி அடுத்தடுத்து வருவதால் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்படுவதாக ஆணையம் கூறியது.
இதற்கிடையே, இரு நிலவழி சோதனைச்சாவடிகளிலும் பதிவான போக்குவரத்து, கொவிட்-19 பரவலுக்கு முந்திய நிலையை விஞ்சிவிட்டதாகக் கூறப்படுகிறது.
டிசம்பர் 15 முதல் 17 வரையிலான காலகட்டத்தில் சோதனைச்சாவடிகளை 1.3 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தியிருந்தனர். இதன்படி, நாளுக்கு ஏறத்தாழ 435,000 பயணிகள் சோதனைச்சாவடிகளைப் பயன்படுத்தினர். 2019ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 30,000 அதிகமாகும்.