ஒரே ஆண்டில் 170 பேருக்கு மரணதண்டனை வழங்கிய சவுதி!

சவுதி அரேபியாவில் கடந்த 2022-ம் ஆண்டைவிட 2023-ம் ஆண்டில் அதிகபட்சமாக 170 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்ற புள்ளிவிவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்கும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்றாகும். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் சல்மான் மற்றும் அவரது மகன் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மரணதண்டனை விதிப்பது அதிகரித்துள்ளது.

சவுதி அரேபியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 38 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, 2022-ம் ஆண்டை விட 2023-ல் மரணதண்டனை வழக்குகள் அதிகரித்துள்ளன. 2022ல் மொத்தம் 147 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு சவுதியில் 187 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

புத்தாண்டு விழாவான டிசம்பர் 31, ஞாயிற்றுக்கிழமையன்று, நான்கு பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நான்கு பேரும் கொலைக் குற்றவாளிகள் என்று உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், இரண்டு மரண தண்டனைகள் வடமேற்கு நகரமான தபூக்கிலும், ஒன்று தலைநகர் ரியாத்திலும், ஒன்று தென்மேற்கில் உள்ள ஜசானிலும் நிறைவேற்றப்பட்டது.

2023-ல் மரணதண்டனை விதிக்கப்பட்ட 170 பேரில் 33 பேர் பயங்கரவாதக் குற்றச்சாட்டை எதிர்கொண்டனர். இருவர் சவுதி ராணுவ வீரர்கள். அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு துப்பாக்கிச்சூடு அல்லது தலை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

எண்ணிக்கை அடிப்படையில், மரண தண்டனை வழக்குகள் 2023-ம் ஆண்டு அதிகரித்துள்ளது. மரணதண்டனை தொடர்பாக சவுதி அரேபியாவில் உள்ள அரசாங்கத்தையும், நீதிமன்றத்தையும் மனித உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சிக்கின்றன. இதை இளவரசர் முகமது பின் சல்மான் மாற்ற விரும்புகிறார், ஆனாலும் மரணதண்டனை வழக்குகள் 2023-ல் மேலும் அதிகரித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here