பாலஸ்தீனம் தனி நாடு அமையவேண்டும்; இல்லையேல் இஸ்ரேலை அங்கீகரிக்க முடியாது – சவுதி அரேபியா

தனி பாலஸ்தீன நாடு அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க மாட்டோம் என்று சவுதி அரேபியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7ம் தேதி முதல் காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் தனி பாலஸ்தீன தேசம் அமைவதை ஏற்க முடியாது என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு சவுதி அரேபியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய சவுதி இளவரசரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான ஃபைசல் பின் ஃபா்ஹான் அல் சவூத், “தனி பாலஸ்தீனம் அமைவதற்கான நம்பிக்கை அளிக்கக்கூடிய நகா்வுகள் மிக அவசியமாகும். அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் இஸ்ரேலுடன் தூதரக உறவை சகஜமாக்குவதற்கான பேச்சுவாா்த்தை மேற்கொள்ளப்படாது. போருக்குப் பிந்தைய காசா பகுதியின் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு சவூதி அரேபியா உதவிகளைச் செய்யும்” என்றார்.

பாலஸ்தீனப் பகுதியில் நீண்ட காலமாக குடியேறி வந்த யூதா்கள், இஸ்ரேல் உருவாக்கத்தை 1948-ம் ஆண்டு பிரகடனம் செய்தாா்கள். அதனை ஐ.நா. அங்கீகரித்தது. இருந்தாலும், இதனை பாலஸ்தீன தேசியவாத அமைப்புகளும், ஏராளமான முஸ்லிம் நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. இஸ்ரேலும், பாலஸ்தீனா்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தனி பாலஸ்தீன நாடாக அங்கீகரிக்க மறுத்து வருகிறது.

இந்தச் சூழலில், ஒரு தனி பாலஸ்தீன நாட்டுக்கு இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு எதிா்த் தரப்பினரும் அங்கீகாரம் வழங்கி இரண்டும் தனித் தனி சுதந்திர நாடுகளாக செயல்படுவதே பாலஸ்தீன பிரச்சினைக்கு நிரந்தர தீா்வு என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த சூழலில் இஸ்ரேலுக்கும், அரபு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவை ஏற்படுத்துவதற்கான அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. மேலும், காசா போா் முடிவுக்கு வந்தததற்குப் பிறகு அந்தப் பிராந்தியத்தில் தனி பாலஸ்தீன தேசம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமெரிக்கா கூறி வருகிறது.

எனினும், அமெரிக்காவின் இந்த யோசனையை ஏற்க முடியாது என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் அறிவித்து அதிா்ச்சி அலையை ஏற்படுத்தினாா். இந்த நிலையில், தனி பாலஸ்தீனம் அமைப்பதற்கான நகா்வுகள் மேற்கொள்ளப்படாவிட்டால் இஸ்ரேல் அங்கீகரித்து அந்த நாட்டுடன் தூதரக உறவை ஏற்படுத்தப் போவதில்லை என்று சவுதி அரேபியா தற்போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் பெருமுயற்சியின் பலனாக நீண்ட காலம் பகை நாடுகளாக இருந்து வந்த இஸ்ரேலுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையை சுமூக உறவு ஏற்படுவதற்கான சூழல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இருநாடுகளுக்கு இடையே மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here