‛‛ஏமாந்த இம்ரான் கான்’’.. பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி.. மீண்டும் பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்! யார் இவர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு கூட்டணி ஆட்சி நடைபெற உள்ளது. நவாஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் பூட்டோவின் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ள நிலையில் மீண்டும் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்க உள்ளார். இதனால் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஏமாற்றமடைந்துள்ளார்.

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதற்கிடையே தான் கடந்த8 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும் 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இதனால் இந்த 70 தொகுதிகளை தவிர்த்து 266 தொகுதிகளுக்கு அன்று தேர்தல் நடக்க இருந்தது. இதில் ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால் 265 தொகுதிகளுக்கு கடந்த 8 ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் 133 தொகுதிகளை வெல்ல வேண்டும். மேலும் இடஒதுக்கீடு தொகுதியை சேர்த்து பார்த்தால் மொத்தம் 169 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனித்து ஆட்சியை பிடிக்கலாம்.

இந்த தேர்தலில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் சின்னம் முடக்கப்பட்டது. மேலும் இம்ரான் கான் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து அவரது சார்பில் வேட்பாளர்கள் சுயேச்சைகளாக போட்டியிட்டனர். அதேபோல் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் – நவாஸ் (பிஎம்எல்-என்), முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலால்வால் பூட்டோ சர்தாரியின் பிபிபி கட்சிகள் இடையே கடும் போட்டி நடந்தது.

கடந்த 8 ம் தேதி தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக தொடங்கியது. பெரிய குழப்பங்கள், மோசடி புகார்கள் எழுந்தன. இதனால் ஓட்டு எண்ணிக்கை என்பது 4 நாளாக தொடர்ந்து நடந்தது. இறுதியில் ஒரு வழியாக ஓட்டு எண்ணிக்கை நிறைவு பெற்றது. இதில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 93 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்-என் கட்சியினர் 75 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பிலால்வால் பூட்டோவின் பிபிபி 54 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இதுதவிர கராச்சியை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த உருது மொழி பேசும் மக்களின் முட்டாஹிதா குவாமி இயக்கம் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதுதவிர பிற தொகுதிகளில் சுயேச்சைகள் வென்றுள்ளன. இருப்பினும் பாகிஸ்தானில் யாருக்கும் ஆட்சியமைக்க தேவையான அளவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் நவாஸ் ஷெரீப் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். பிலாவால் பூட்டோவின் கட்சி மற்றும் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைக்க அவர் திட்டமிட்டார்.

இந்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தற்போது நவாஸ் ஷெரீப் மற்றும் பிலாவால் பூட்டோவின் கட்சியினர் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி அவர்களின் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இந்நிலையில் தான் நேற்று பிலாவால் பூட்டோ மற்றும் நவாஸ் ஷெரீப் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;

பாகிஸ்தான் எங்கள் பிஎம்எல்-என் (நவாஸ் ஷெரீப் கட்சி) மற்றும் பிபிபி (பிலாவால் பூட்டோ கட்சி) இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்கிறது. மீண்டும் பிரதமராக பிஎம்எல்-என் கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்க உள்ளார். அதேவேளையில் பிபிபி கட்சியின் துணை தலைவரான ஆசீப் ஜர்தாரி நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார். நாட்டில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை எங்கள் கூட்டணிக்கு உள்ளது. இதனால் நாங்கள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறோம் என்றனர்.

இதன்மூலம் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஏமாற்றமடைந்துள்ளனர். தற்போது ஊழல் புகாரில் அவர் சிறையில் உள்ளார். தனது ஆதரவு வேட்பாளர்கள் அதிக இடங்களில் வென்றாலும் கூட அவர்களை ஒருங்கிணைத்து கூட்டணி ஆட்சியை அமைக்க முடியவில்லையே என இம்ரான் கான் புலம்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தானில் மீண்டும் பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப் யார்? என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது பாகிஸ்தானில் கடந்த முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைத்து இம்ரான் கான் பிரதமரானார். அதன்பிறகு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். இதையடுத்து பிஎம்எல்-என் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தது. அதில் பிரதமரானவர் தான் ஷெபாஸ் ஷெரீப். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here