காசா போரில் இதுவரை 30,035 பாலஸ்தீனியர்கள் பலி

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில், அங்கு கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளதாக, காசா சுகாதார அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சமகாலத்தில் அரங்கேறி வரும் கொடூர போராக, காசா மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் நிலை கொண்டுள்ளது. போர் தொடங்கி அதன் 5 மாதங்களை அடுத்த வாரம் நிறைவு செய்யவுள்ள சூழலில், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இதுவரை 30,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் இன்று(பிப்.29) அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் வரலாற்றில் மிகக் கொடிய வன்முறை சம்பவமாக, ஹமாஸ் போராளிகள் அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,200 பேரைக் கொன்றது பதிவாகி உள்ளது. பெருமளவிலான அந்த பொதுமக்கள் படுகொலையைத் தொடர்ந்து 250 பணயக்கைதிகளை கடத்திக்கொண்டு காசா திரும்பியது ஹமாஸ் ஆயுதக் குழு. இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல் ஹமாஸை பூண்டோடு அழிக்கும்வரை ஓயமாட்டோம் என காசா மீது தொடுத்த தாக்குதல் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

2.3 மில்லியன் பாலஸ்தீனியர்களைக் கொண்ட காசாவின் மக்கள்தொகையில் 80 சதவீதத்தினர் போர் காரணமாக தங்கள் வாழிடத்திலிருந்து விரட்டப்பட்டார்கள். அப்படி இடம்பெயராது அங்கேயே இருந்தவர்கள், இஸ்ரேலின் தாக்குதலில் பலியானது போக, பட்டினி மற்றும் நோய் தொற்று காரணமாக இறந்து வருகின்றனர். இந்த மரணங்களுக்கு மத்தியில், காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 30,035 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 70,457 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் நடத்தும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக செயல்படும் காஸாவின் சுகாதார அமைச்சகம், உயிரிழப்புகள் பற்றிய விரிவான பதிவுகளை பராமரித்து வருகிறது. ஐ.நா அமைப்பு, சுயாதீன வல்லுநர்கள் மற்றும் இஸ்ரேலின் சொந்த எண்ணிக்கைகளுடன் இவை பெரும்பாலும் பொருந்தி வருகின்றன.

சுகாதார அமைச்சகத்தின் இந்த எண்ணிக்கையில் சிவிலியன்கள் மற்றும் போராளிகள் என்று வேறுபடுத்தவில்லை, ஆனால் கொல்லப்பட்டவர்களில் மூன்றில் இரு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரிய வருகிறது. மீட்க முடியாத அளவுக்கு இடிபாடுகளுக்கு அடியில் புதைந்த உடல்கள் காரணமாக, பலியானோரின் உண்மையான எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கக்கூடும் என்றே சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.

எகிப்து, கத்தார் உள்ளிட்ட மத்தியஸ்த நாடுகளின் உதவியால் அண்மையில், முன்வைக்கப்பட்ட போர் இடைநிறுத்த ஏற்பாட்டுக்கு ஹமாஸ் இறங்கி வந்த நிலையில், ஹமாஸின் நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் உடன்பட மறுத்தது. இதனால் போர் நிறுத்தத்துக்கான வாய்ப்புகள் குறைந்து, தாக்குதல் நடவடிக்கைகள் மீண்டும் வேகம் பிடித்துள்ளன. இதன் காரணமாக பலியாவோர் எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பாகும் என்றும் அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here