பொழுதுபோக்கிற்காக கஞ்சா பயன்படுத்துவதை 2024 இறுதிக்குள் தடைசெய்ய தாய்லாந்து முடிவு

பேங்காக்:

2024ஆம் ஆண்டு இறுதிக்குள் பொழுதுபோக்குக் காரணங்களுக்காகக் கஞ்சா பயன்படுத்தப்படுவதைத் தாய்லாந்து தடை செய்யும் என அந்நாட்டுச் சுகாதார அமைச்சர் சோல்னன் ஸ்ரீகேவ் புதன்கிழமை (பிப்ரவரி 28) ராய்ட்டர்சுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.

மருத்துவக் காரணங்களுக்காக மட்டும் கஞ்சாவைப் பயன்படுத்த அந்நாடு தொடர்ந்து அனுமதிக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 2018ஆம் ஆண்டுத் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான கஞ்சாவை மருத்துவக் காரணங்களுக்காகப் பயன்படுத்த அனுமதி அளித்த முதல் நாடாகத் தாய்லாந்து உள்ளது. மேலும், அந்நாடு பொழுதுபோக்கிற்காகக் கஞ்சாவைப் பயன்படுத்த 2022ஆம் ஆண்டு அனுமதி அளித்தது.

இதன் விளைவாக, 2025ஆம் ஆண்டுக்குள் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் ( S$1.6 பில்லியன்) வர்த்தகத்தில் பங்கெடுக்க ஆயிரக்கணக்கான கஞ்சா கடைகள் முளைக்கும் என முன்னுரைக்கப்பட்டது.

கஞ்சா பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இதனால், அதைக் கட்டுப்படுத்த தாய்லாந்து அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டது. அதற்காக வரைவு மசோதா ஒன்றை உருவாக்கியது.

வரைவு மசோதா இவ்வாண்டு மார்ச் மாதம் அந்நாட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும், இவ்வாண்டு இறுதிக்குள் அது சட்டமாக நிறைவேற்றப்படும் என்றும் சோல்னன் ஸ்ரீகேவ் கூறினார்.

“சட்டம் இயற்றவில்லை என்றால் கஞ்சாவின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடியாது,”எனவும், பொழுதுபோக்கிற்காகத் தாய்லாந்தில் கஞ்சா பயன்படுத்தப்படுவதையம் சுட்டிக்காட்டிய அவர், “கஞ்சாவின் தவறான பயன்பாட்டால் தாய்லாந்தில் சிறுவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதை இப்படியே விட்டுவிட்டால் கால ஓட்டத்தில் மற்ற போதைப்பொருள்களும் தாய்லாந்துக்குள் வர இது வழிவகுக்கும்,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here