சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு அணு ஆயுதங்களா? மர்மக் கப்பலை மடக்கிய இந்தியா

பாகிஸ்தானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கு உதவும் நோக்கில், சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்ற கப்பலை இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகள் மும்பை துறைமுகத்தில் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

பாகிஸ்தானின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களுக்கு உதவக்கூடிய சரக்குகள் இருப்பதான சந்தேகத்தின் அடிப்படையில், சீனாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிச் செல்லும் கப்பலை, மும்பையின் நவா ஷேவா துறைமுகத்தில் இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகள் தடுத்து நிறுத்தின. இது தொடர்பான தகவலை பிடிஐ செய்தி நிறுவனத்திடம் மார்ச் 2 அன்று அதிகாரிகள் உறுதி செய்தனர்.

உளவுத் தகவல்களின் அடிப்படையில், ஜனவரி 23 அன்று கராச்சி நோக்கிய வணிகக் கப்பலான சிஎம்ஏ சிஜிஎம் அட்டிலாவை சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இத்தாலிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சிஎன்சி எனப்படும் கம்ப்யூட்டர் நியூமெடிகல் கன்ட்ரோல் இயந்திரம் பொருந்திய சரக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. சிஎன்சி தொழில்நுட்பம் பல்வேறு வகையிலான இயந்திர பயன்பாடுகள் மற்றும் ரவுட்டர்களை வழி நடத்துகின்றது. இவற்றின் செயல்திறன் மற்றும் துல்லியம் காரணமாக பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப் பட்டு வருகின்றன.

அவற்றில் அணுசக்தி திட்டங்களும் அடங்கும். சிஎன்சி இயந்திரங்கள் 1996 முதல் சர்வதேச ஆயுத கட்டுப்பாடு மற்றும் பரவல் தடுப்புக்கு ஆளாகி இருக்கின்றன. இது தனிநபர் மற்றும் இராணுவ பயன்பாட்டுடன் கூடிய உபகரணங்களின் பரவலைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் 42 உறுப்பு நாடுகளில் ஒன்றான இந்தியா, வழக்கமான ஆயுதங்கள் மற்றும் அதுசார்ந்த தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல் பரிமாற்றத்தில் பங்கேற்கிறது. இதே சிஎன்சி இயந்திரம், வட இந்தியாவால் அதன் அணுசக்தி திட்டத்துக்காக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மும்பை துறைமுகத்தில் முடக்கப்பட்ட சீன – பாகிஸ்தான் கப்பலில் சரக்குகளை ஆய்வு செய்து, அதில் பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்துக்கான பயன்பாட்டை இந்தியாவின் டிஆர்டிஓ குழு சரிபார்த்தது. ’ஷாங்காய் ஜேஎக்ஸ்இ குளோபல் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்’ என்ற சீன நிறுவனத்திடமிருந்து, பாகிஸ்தானின் ‘பாகிஸ்தான் விங்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற முகவரி சரக்கினை கொண்டு செல்வதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்திய ஏஜென்சிகளின் துழாவலில், 22,180 கிலோ எடையுள்ள இந்த சரக்கு பாகிஸ்தானில் உள்ள ’காஸ்மோஸ் இன்ஜினியரிங்’ நிறுவனத்திற்காக செல்வது கண்டறியப்பட்டது.

சர்வதேசளவில் கண்காணிப்பு பட்டியலில் இருக்கும் இந்த் காஸ்மோஸ் இன்ஜினியரிங் நிறுவனம், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பெறுவதற்கு, அது குறித்தான கண்டறிதலைத் தவிர்ப்பதற்காக அடையாளங்களை மறைத்து, சீனாவை ஒரு வழித்தடமாக பயன்படுத்தியதை ஏற்கனவே இந்தியா கண்டறிந்துள்ளது.

இவை அனைத்தும் பாகிஸ்தானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கான சீனாவின் ஆதரவைப் பற்றிய இந்தியாவின் கவலைகள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பொறுப்பான ’பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு’க்கு இந்த சரக்குகள் சென்று சேர்வதாகவும் இந்தியா ஐயம் கொண்டுள்ளது. இதனை மும்பையில் முடக்கப்பட்டிருக்கு மர்மக் கப்பலில் இந்தியாவின் டிஆர்டிஓ விசாரணை தெளிவுபடுத்த இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here