சுற்றுலாவுக்கு சென்றவர்களை மிரட்டி போரில் ஈடுபடுத்துகிறதா ரஷ்ய ராணுவம்?

ஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த சில இளைஞர்கள் சுற்றுலாவுக்காக ரஷ்யா சென்றதில், அந்நாட்டு ராணுவத்தின் வலையில் சிக்கி உக்ரைன் போர் முனையில் நிறுத்தப்பட்டுள்ளதாக, தாய் நாட்டிடம் உதவி கோரி உள்ளனர்.

சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ ஒன்று, பஞ்சாப் மற்றும் ஹரியாணாவை சேர்ந்த7 பேரின் கோரிக்கையை பதிவு செய்துள்ளது. ராணுவத்தினர் அணியும் குளிர்கால சீருடையுடன் தென்படும் அந்த இந்திய இளைஞர்கள், தங்களது இக்கட்டான நிலையை விவரித்தும், இந்திய அதிகாரிகளின் உதவியை கோரியும் வீடியோ செய்தியை பதிவு செய்துள்ளனர்.

கடந்தாண்டு டிசம்பர் இறுதியில் 90 நாள் சுற்றுலா விசாவின் கீழ் ரஷ்யா சென்றவர்கள், ரஷ்யாவின் அண்டை தேசமான பெலாரஸில் ஏஜெண்டுகள் மற்றும் போலீஸாரின் வலையில் சிக்கி ரஷ்யா ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக அந்த வீடியோவில் இந்திய இளைஞர்கள் விவரித்துள்ளனர். அதன் பின்னர் அந்த இளைஞர்கள் கட்டாய ராணுவப் பயிற்சி வழங்கப்பட்டு உக்ரைன் போர் முனையில் போரிட நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த வீடியோவில் விவரித்துள்ளனர்.

இந்த வீடியோவை பதிவு செய்திருக்கும் ஹர்ஷ் என்ற இளைஞர், தங்களைப் போன்றே சுமார் 100 இந்திய இளைஞர்கள், ரஷ்யாவின் பொறியில் சிக்கி உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விவரித்துள்ளார். மேலும் பெலாரஸ் போலீஸார் தரப்பில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரஷ்ய ராணுவப் பணி என நிபந்தனைகளை விதித்து, தங்களை ரஷ்ய ராணுவத்தில் தள்ளி விட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. தளவாடங்கள் மட்டுமன்றி போர் வீரர்களுக்கும் ரஷ்யாவில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. மேலும் உக்ரைன் மீதான போரில் ரஷ்ய வீரர்கள் கொல்லப்படுவதற்கு எதிராக ரஷ்ய மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நீடித்து வருகிறது. இதனால் போர் தொடங்கியது முதலே கூலிப் படைகள் மற்றும் வெளிநாட்டு ஒப்பந்தக் கூலிகளை வைத்து ரஷ்ய ராணுவம் ஒப்பேற்றி வருகிறது.

இதன்பொருட்டு சர்வதேச நாட்டினருக்கு பகிரங்க அழைப்பையும் ரஷ்யா விடுத்திருந்தது. ’ரஷ்ய ராணுவத்தில் இணைந்து உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடும் சர்வதேச நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ரஷ்ய குடியுரிமை வழங்கப்படும்’ எனவும் ஆசை காட்டியிருந்தது. ஆனால் ரஷ்யாவின் கூலிப்படைகள் ரஷ்ய ராணுவத்துக்கு எதிராகவே திரும்பியதும் அதனால் பெரும் களேபரங்களையும் ரஷ்ய ராணுவம் எதிர்கொண்டதும் பின்னர் நடந்தது.

அதேபோன்று, தங்கள் இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தின் பொறியில் சிக்கி உக்ரைன் போர் முனையில் நிறுத்துவதாக ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் புகார் வாசித்தன. இந்த வரிசையில் தற்போது இந்திய இளைஞர்கள் 7 பேர் உக்ரைன் போர் முனையில் இருந்து அபயக்குரல் எழுப்பி உள்ளனர்.

இதனிடையே இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஷ்ய இராணுவத்தில் உதவியாளர்களாக பணிபுரியும் சுமார் 20 இந்தியர்கள் உதவிக்காக இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளதை உறுதி செய்தார். ரஷ்யா இந்தியாவின் நட்பு தேசம் என்பதால், இந்திய இளைஞர்களை அங்கிருந்து மீட்பதில் சிரமம் இருக்காது. ஆனால், சுற்றுலா சென்ற இந்தியர்களை உக்ரைன் போரில் ஈடுபடுத்திய ரஷ்யாவின் செயல்பாடு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here