கோலாலம்பூர்:
கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி போதைப்பொருள் தடுப்பு பிரிவு பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் ஐந்து பெண்கள் உட்பட13 பேர் கைது செய்யப்பட்டனர்.
செந்தூல் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில், பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கி மார்ச் 2 வரை இந்த நடவடிக்கை நடந்தது என்றும், அவர்களிடமிருந்து சுமார் 1 இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டது என்று, செந்தூல் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அஹ்மட் சுகர்னோ முகமட் ஜஹாரி தெரிவித்தார்.
ஜாலான் கூச்சிங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் முதல் சோதனை நடத்தப்பட்டு, போதைப்பொருள் வியாபாரி என்று சந்தேகிக்கப்படும் ஒருவரைக் கைது செய்யப்பட்டார். அவரை ஆய்வு செய்ததில், சுமார் மூன்று கிலோ எடையுள்ள கஞ்சா வகை போதை மருந்துகளின் பதப்படுத்தப்பட்ட 5 கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
“சந்தேக நபரின் விசாரணையின் அடிப்படையில் அதே நாளில் மதியம் 1 மணியளவில் ஜாலான் கோம்பாக்கில் உள்ள ஒரு குடியிருப்பில் இரண்டாவது சோதனை நடத்தப்பட்டது.
“இந்தச் சோதனையின் விளைவாக, நான்கு ஆண்களும் ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டனர், மேலும் 23 வெளிப்படையான பிளாஸ்டிக் பைகளில் சுமார் ஆறு கிலோகிராம் எடையுள்ள கஞ்சா துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன,” என்று அவர் இன்று IPD செந்தூலில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அடுத்ததாக செந்தூலில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், ஒருவர் கைது செய்யப்பட்டு 276.5 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் மார்ச் 2 ஆம் தேதி செந்தூல் செலாத்தானில் உள்ள காண்டோமினியம் பகுதியில் போலீசார் சோதனை நடத்தி மற்றொருவரை கைது செய்து, அவரிடமிருந்து எட்டு கிலோ எடையுள்ள அதே வகை போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் படி விசாரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.