கோலாலம்பூர் :
நாடு முழுவதும் கைவிடப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் தங்கள் பழைய வாகனங்களின் பதிவை இணையம் மூலமாக நீக்குவதற்கான செயல்முறையை (e-Dereg) அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது சுற்றுச்சூழல் துறையால் உரிமம் பெற்ற இரண்டு பழைய வாகனங்கள் அப்புறப்படுத்தல் மையங்கள் (AATF) உள்ளன: ஒன்று காஜாங்கிலும் மற்றொன்று ஷா ஆலாமிலும் உள்ளன, இந்நிலையில் மேலும் எட்டு பழைய வாகனங்கள் அப்புறப்படுத்தல் மையங்கள் விரைவில் திறக்கப்படும் என்று, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
மக்கள் ஆன்லைன் மூலம் தங்களின் மோட்டார் வாகனப் பதிவு நீக்க பழைய வாகனங்கள் அப்புறப்படுத்தல் மையங்களுக்கு (AATF) அல்லது இணையம் மூலமாக e-Dereg-க்கு செல்லலாம் என்று லோக் கூறினார்.
“வாகன உரிமையாளர்கள் தங்கள் பழைய வாகனங்களை முறையாக அப்புறப்படுத்துவதில் ஆர்வம் காட்டாததற்கு ஒரு காரணம் இப்போதுள்ள சிக்கலான செயல்முறை என்று கூறிய அவர், குடியிருப்பு பகுதிகளில் கைவிடப்பட்ட வாகனங்களை நிர்வகிப்பதில் உள்ளூராட்சி சபைகளும் அதே சவாலை எதிர்கொள்கின்றன என்றார்.
“இந்தச் சிக்கலைக் கருத்தில் கொண்டு, e-Dereg அமைப்பு, தங்கள் வாகனங்களை அப்புறப்படுத்த ஆர்வமுள்ள வாகன உரிமையாளர்களுக்கு இனி சாலைப் போக்குவரத்துத் துறை கவுன்டருக்குச் செல்லாமல், பதிவு நீக்க செயல்முறையை முடிக்க உதவுகிறது,” என்று அவர் கூறினார்.
இது தவிர இந்த e-Dereg அமைப்பு மூலம் வாகனங்களை இழுத்துச் செல்லும் சேவையும் வழங்கப்படும், அதேநேரம் கார் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் அபாயத்தையும் தவிர்ப்பார்கள் என்று லோக் கூறினார்.