கோலாலம்பூர்:
புக்கிட் சுபாங் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் அருகே, குத்ரி காரிடார் எக்ஸ்பிரஸ்வே வெளியேறும் இடத்தில், நேற்று ஒரு லோரி, மூன்று கார்கள், ஒரு வேன் மற்றும் ஒரு பல்நோக்கு வாகனம் (MPV) சம்பந்தப்பட்ட 6 வாகனங்களை உட்படுத்தி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு பெண் மற்றும் அவரது குழந்தை படுகாயமடைந்தனர்.
டாஷ்கேம் காட்சிகளின் அடிப்படையில், பத்து அராங்கிலிருந்து சைபர்ஜெயா நோக்கிச் சென்ற லோரி, சந்திப்பை அடைந்ததும் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது என்று சுங்கை பூலோ காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் முகமட் ஹபீஸ் முஹம்மது நோர் தெரிவித்தார்.
“லோரி முதலில் புரோட்டான் சாகா BLM மீது மோதியது. இதனால் புரோட்டான் சாகா அதே திசையில் சென்று கொண்டிருந்த அருகிலுள்ள பாதையில் வந்துகொண்டிருந்த நான்கு வாகனங்கள் மீது மோதியது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்நிலையில் புரோட்டான் சாகாவில் பயணித்த இரண்டு பேர், 29 வயது பெண் மற்றும் அவரது நான்கு வயது குழந்தை ஆகியோர், விபத்தின் விளைவாக பலத்த காயமடைந்தனர்.
இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த லோரி ஓட்டுநர் மேலதிக விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் சொன்னார்.





















