ஸம்ரி வினோத் மீது எப்போது நடவடிக்கை?

 

பி.ஆர்.ராஜன்

சாமானியர்கள் மீது ஒரே நாளில் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டு தண்டனையும் வழங்கப்படுகிறது. இதை நாம் குறைசொல்லவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட நபருக்கு வழக்கறிஞர் சேவை மேலும் போதுமான அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

சர்ச்சைக்குரிய காலுறை  விவகாரம் தொடர்பில் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்துப் பதிவு செய்த 35 வயது சியோக்  வாய் லூங் என்ற நபருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அண்மையில் 6 மாதம்  சிறைத்தண்டையும் 12,000 ரிங்கிட் அபராதமும் விதித்தது.

நீதிபதி சுஸானா ஹுசேன் முன்னிலையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.  அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

கீ போர்ட் வாரியர் என்ற பெயரில் அந்த கருத்தை நான்  பதிவு செய்தேன். அதை வேண்டும் என்று நான் செய்யவில்லை. ஃபேஸ்புக் பார்ப்பதை நான் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். கருத்துகளையும் தெரிவிப்பேன். மற்றவர்களின் சமயத்தை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை.

இது ஒரு சிறிய  விவகாரம் என்றுதான் நான் நினைத்திருந்தேன். இதில் இவ்வளவு பெரிய சிக்கல் இருக்கிறது என்பதை நான் நினைத்துப் பார்க்கவே இல்லை என்று கண்களில் கண்ணீர் கொப்பளிக்க சியோக் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தனக்கு கருணை காட்டுமாறு நீதிமன்றத்தை அவர் கேட்டுக்கொண்டார்.  சிறைத்தண்டனையும் அபராதமும் தனக்கு வேலை போகும் நிலையை ஏற்படுத்திவிடும். என்னுடைய 63 வயது தாயை பார்த்துக்கொள்ளமுடியாமல் போய்விடும் என்று அவர் குறிப்பிட்டார்.

மார்ச் 2ஆம் தேதி புதன்கிழமை சியோக் கைது செய்யப்பட்டார். மார்ச் 22ஆம் தேதி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அன்றைய தினமே குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

அதேசமயத்தில் நீண்ட காலமாகவே இந்து சமயத்தையும் இந்து தெய்வங்களையும் தன்னுடைய பொல்லாத வாயால் இழிவுபடுத்தி வரும் ஸம்ரி வினோத் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் இருக்கிறது.

 மிக அண்மையில் இந்து சமயத்தையும் சிவன் வழிபாட்டையும் சிவன் சிலையையும் பற்றி இவர் இழிவாக பேசியிருக்கிறார். இந்து சமயத்தையும் இந்து தெய்வங்களையும் அவர் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார். இந்து மதத்திலிருந்து மதம் மாறிய இவர் மீது ஆயிரக்கணக்கில் போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆனால் இதுவரை ஸம்ரி வினோத் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்பது நமக்கு மிகத் தெளிவாக தெரிந்தாலும் அதனை வெளியில் சொல்ல முடியாத ஒரு நிலை. சட்டம் அனைவருக்கும் சமம் என்பதெல்லாம் வெறும் பேச்சுதானா? இன்னும் எத்தனை காலத்திற்கு ஸம்ரி வினோத் இப்படியே இந்துக்கள் மீதும் அவர்களின்  வழிபாடு மீதும் தாக்குதல் நடத்திக்கொண்டிருப்பார்?. சியோக் வாய் லூங்கிற்கு ஒரு சட்டம், ஸம்ரி வினோத்திற்கு ஒரு சட்டமா?.

பொதுவாகவே  இனம், சமயம் போன்றவற்றை இழிவுபடுத்துவோருக்கு எதிராக சட்டம் பாயும் என்று ஆட்சியாளர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை கூறி வருகின்றனர். ஆனால் செயல்பாட்டில் அது வெறும் பூஜ்ஜியமாகத்தான் இருக்கிறது. ஸம்ரி வினோத் இதற்கு நல்ல உதாரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here