அமெரிக்காவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை

புளோரிடா மாகாண கவர்னர் ரான் டிசாண்டிஸ், 16 வயது மற்றும் அதற்கும் குறைவான பயனர்களுக்கு சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை முன்னெடுத்துள்ளார். இது சர்ச்சை – வரவேற்பு ஆகிய கருத்துக்களை ஒருசேர பெற்று வருகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாண கவர்னர் ரான் டிசாண்டிஸ் என்பவர் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக பயன்பாடுகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்; 14-16 வயதுடையோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த பெற்றோரின் ஒப்புதல் அவசியமாகும்.

சமூக ஊடகங்களில் குழந்தைகளின் பயன்பாட்டை தடை மற்றும் தணிக்கை செய்யும் புதிய சட்டம் ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது. இதனை ஆதரிப்போர் ’சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்கு பல்வேறு வழிகளில் தீங்கு விளைவிக்கின்றன என்றும், இந்த சட்டம் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை பாதுகாக்க அதிக வாய்ப்புகளை வழங்குகிறது’ என்ற கவர்னரின் கருத்துக்கு வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

சமூக ஊடக தளங்களை அதிகமாகப் பயன்படுத்தும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்க வாய்ப்புள்ள, கவலை, மனச்சோர்வு மற்றும் மனநோய்களை புதிய சட்டம் தடுக்கும் என்றும் ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

ஆனால் புதிய சட்டத்தை எதிர்ப்போர், ‘இந்த மசோதா அமெரிக்க அரசியலமைப்பின் பிரதானமான பேச்சு சுதந்திரத்திற்கான பாதுகாப்பை மீறுவதாகவும், அனைத்து வயதினரும் தங்கள் குழந்தைகள் ஆன்லைனில் இருப்பது குறித்து பெற்றோர்கள் மட்டுமே முடிவெடுக்க வேண்டும்; அரசாங்கம் அல்ல’ என்றும் விமர்சிக்கின்றனர். இவர்களுடன் சமூக ஊடகங்களும் இணைந்திருக்கின்றன.

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, இந்த சட்டத்தை எதிர்ப்பதோடு ‘இது பெற்றோரின் விருப்பத்தை மட்டுப்படுத்துவதாகவும், பயனர்கள் வயது சரிபார்க்கப்பட வேண்டிய தனிப்பட்ட தகவல்களின் காரணமாக தரவு தனியுரிமை கவலைகளை எழுப்புவதாகவும்’ கூறுகிறது.

புதிய மசோதா எந்த குறிப்பிட்ட சமூக ஊடக தளத்தையும் வெளிப்படையாக குறை சொல்லவில்லை. ஆனால் சமூக ஊடகங்களின் இலக்குகள் எல்லையற்ற ஸ்க்ரோலிங்கை ஊக்குவிப்பதாகவும், முடிவெடுப்பதில் முதிர்ச்சியற்ற இளம் வயதினரின் சிந்தனையை சமூக ஊடகங்கள் ஆக்கிறமிப்பதாகவும், குறிப்பாக ஆட்டோ-பிளே வீடியோக்கள் மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை கடுமையாக குற்றம்சாட்டுகிறது. திறந்த தேசமான அமெரிக்காவில், குழந்தைகளின் நலன் நாடும் வகையில் முன்மாதிரியான ஏற்பாடுகளில் வலது கால் வைத்துள்ளது உலக அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here