தொடரும் சர்ச்சை: காலுறைக்கு அடுத்து அல்லாஹ் காலணி விவகாரம், 1,145 ஜோடி காலணிகள் பறிமுதல்

கோலாலம்பூர்:

ரபு எழுத்துக்களில் “அல்லாஹ்” என்ற வார்த்தையைப் போன்று தோன்றுவதாக கூறப்படும், சர்ச்சைக்குரிய காலணியின் லோகோ தொடர்பில் Vern’s Holding நிறுவனத்திடமிருந்து 1,145 ஜோடி காலணிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

காவல்துறை இந்த விஷயத்தில் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவுடன் (JAKIM) இணைந்து செயல்படும் என்று தேசிய போலீஸ் படை தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இக்காலணிகள் ஜோகூர், கோலாலம்பூர், பினாங்கு , கெடா ஆகிய இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும், இது தொடர்பில் இதுவரை 8 புகார்களை காவல்துறை பெற்றதாகவும், தற்போது அதுதொடர்பான விசாரணைகளை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலான 3 நிமிட காணொளியில், ஒருவர் தான் வாங்கிய காலணியில் “அல்லாஹ்” என்ற வார்த்தையை சித்தரிப்பதுபோல் ஒரு லோகோ இருப்பதாக கூறினார்.

இதைத் தொடர்ந்து, Vern’s Holding நிறுவனம், எந்தவொரு மதத்தையும் அல்லது நம்பிக்கையையும் சிறுமைப்படுத்த்தும் எண்ணமோ, அல்லது அவமதிக்கும் எண்ணமோ இல்லை என்றும், அந்த லோகோ கயிறுகளுடன் பிணைக்கப்பட்ட காலணியின் கிராபிக் வடிவம் என்றும் கூறி, நேற்று மாலை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும் இச் சின்னம் கொண்ட காலணிகளின் விற்பனையை உடனே நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஏற்கெனவே அக்காலணிகளை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதனை திருப்பிக் கொடுத்து முழு பணத்தையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இனம், மதம் மற்றும் அரச குடும்பம் (3R) என்பவற்றுடன் தொடர்புடைய சமூக ஊடக உள்ளடக்கத்தைப் பதிவேற்றவோ, பகிரவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (SKMM) பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here