கோலாலம்பூர்:
தமக்கு ஆதரவு அளித்தால் மட்டுமே தொகுதிகளுக்குத் தேவையான நிதி வழங்கப்படும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நிபந்தனை விதிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது உண்மையன்று என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக, அரசியல் நிலைத்தன்மை, பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வதில் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தியதாக அவர் தெளிவுப்படுத்தினார்.
எதிர்க்கட்சிகள் வசமுள்ள தொகுதிகளுக்குத் தேவையான நிதியை வழங்குவது குறித்து பரிசலீனை செய்ய மலேசியாவின் ஒற்றுமை அரசாங்கத்தின் உச்சத் தலைமைத்துவ மன்றம் இணங்கியிருப்பதாக துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப் ஏப்ரல் 18 அன்று தெரிவித்தார்.
இதுகுறித்து புரிந்துணர்வு அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு கூடுதல் கலந்துரையாடல்களுக்காக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றார் அவர்.
உச்சத் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்துக்கு ஏப்ரல் 17ஆம் தேதியன்று பிரதமர் பிரதமர் தலைமை தாங்கினார். அதில் எதிர்க்கட்சிகள் வசம் உள்ள தொகுதிகளுக்குத் தேவையான நிதியை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்த எடுக்கப்பட இருக்கும் முடிவு கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாகவும், இதுகுறித்து அமைச்சரவை தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், அரசாங்க சேவை ஊதியம் தொடர்பாகப் பொறுப்பேற்கும் குழு நடத்திய கூட்டத்துக்குத் தாம் தலைமை தாங்கியதாகவும் சம்பள உயர்வு குறித்து தொழிலாளர் தினப் பேரணியின்போது அறிவிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
உலகளாவிய நிலையற்ற தன்மை சவால் விடுக்கும்போதிலும் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதில் தமது அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளதாக அவர் உறுதி அளித்தார்.