குளுவாங்:
ஜாலான் லாங்சாட்டில் உள்ள ஒரு கடையில் செய்யப்பட்டதாக நம்பப்படும் கண்கட்டி வித்தையில் 40 வயதுடைய ஒருவர் RM2,000 இழந்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 19) மாலை 4.30 மணியளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த வளாகத்திற்குள் நுழைந்ததை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்ததாக புகாரளிக்கப்பட்டதாக குளுவாங் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் பஹ்ரின் முகமட் நோ தெரிவித்தார்.
அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், சந்தேக நபர் கருப்பு தொப்பி, முகமூடி, கருப்பு ஸ்லிங் பை, குட்டை பேண்ட் மற்றும் பழுப்பு நிற டி-சர்ட் அணிந்து கடைக்குள் நுழைவதைக் காணமுடிந்தது என்று அவர் சொன்னார்.
“பின்னர் பாதிக்கப்பட்டவர் தனது கடையில் 2,000 ரிங்கிட் பணத்தை இழந்ததைக் கண்டு காவல்துறை புகார் அளித்தார் என்றும், இது திடர்பில் விசாரணைகள் நடந்து வருகின்றன, ”என்றும் அவர் இன்று செவ்வாய்க்கிழமை (மே 21) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
திருட்டு குற்றத்துக்காக குற்றவியல் சட்டம் 380 பிரிவின் கீழ் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்துடன் விவரங்களைப் பகிர்ந்து கொள்ள முன்வருமாறும் அல்லது 07-776 6882 என்ற எண்ணில் குளுவாங் மாவட்ட காவல்துறை ஹாட்லைனை அழைக்கலாம் என்றும் அவர் சொன்னார்.





















