கோலா நெராங்:
தாய்லாந்தின் எல்லைப் பகுதியான பாடாங் தெராப் பகுதியில் RM56,000க்கும் அதிகமாக மதிப்புடைய 700 கிலோகிராம் எடையுள்ள கெத்தும் இலைகள் கடத்தும் முயற்சியை மலேசிய ஆயுதப் படை (ATM) முறியடித்துள்ளது.
காலை 6.30 மணியளவில், மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ள வனப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் கிடந்த மிட்சுபிஷி பஜேரோ காரை மலேசிய ஆயுதப் படை வீரர்கள் குழு கண்டுபிடித்தது. அதனை சோதனையிட்டதில் மொத்தம் 700 கிலோ எடையுள்ள கெத்தும் இலைகள் அடங்கிய 70 பொட்டலங்கள் வாகனத்தில் இருப்பது கண்டறியப்பட்டது என்று, மலேசிய காலாட்படை இரண்டாம் பிரிவு (2 பிரிவு) தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட அனைத்து பொட்டலங்களும் வாகனமும் மேலதிக நடவடிக்கைக்காக கோலா நெராங் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


















