மராட்டிய மாநிலம் சித்துதுர்க் மாவட்டம் மால்வான் கடற்கரையில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட சிவாஜி சிலை, கடந்த 26-ந்தேதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த பிரச்சினை தற்போது பூதாகரமாகியுள்ளது. இந்த நிலையில், சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்த இடத்தை நேற்று இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே பார்வையிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது:-
சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்தது மன்னிக்க முடியாதது. சம்பந்தப்பட்ட பொதுபணித்துறை மற்றும் கடற்படை அதிகாரிகளும் இந்த சம்பவத்தில் விசாரிக்கப்பட வேண்டும். மராட்டியத்தில் அனுபவம் வாய்ந்த சிற்ப கலைஞர்களுக்கு பஞ்சமில்லை. அப்படி இருக்கையில் புதியவர்களுக்கு ஏன் இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் சிலை உடைந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளை கேட்டுக்கொள்கிறேன்.