ஹைதராபாத்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட இந்தியர் நால்வர் உயிரிழந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) பிற்பகலில் ஐந்து வாகனங்கள் தொடர்புடைய அவ்விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்ஷினி வாசுதேவன், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆர்யன் ரகுநாத், அவருடைய நண்பர் ஃபரூக் ஷேக், லோகேஷ் பலச்சர்லா ஆகிய நால்வரும் அவ்விபத்தில் மாண்டுபோயினர்.
கார் பகிர்வுச் செயலி மூலம் தொடர்புகொண்ட அவர்கள், பென்டன்வில் நோக்கிச் சென்றபோது இவ்விபத்து நேரிட்டது. டெக்சஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பயின்றுவந்த தர்ஷினி, பென்டன்வில்லில் உள்ள தம்முடைய உறவினரைப் பார்க்கச் சென்றதாகக் கூறப்பட்டது. விபத்து நேர்வதற்குச் சற்று முன்னர்தான் தர்ஷினி தம் பெற்றோருடன் பேசியதாகக் கூறப்பட்டது. அவரது உடலை இந்தியாவிற்குக் கொண்டுவர உதவும்படி அவருடைய பெற்றோர் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்யன் ரகுநாத், கோவையிலுள்ள அம்ரிதா விஷ்வ வித்யாபீடத்தில் பொறியியல் பட்டம் பயின்றவர். அவர் டாலசில் உள்ள தம் உறவினரைப் பார்த்துவிட்டு, வீடு திரும்பியபோது இத்துயரம் நிகழ்ந்தது. லோகேஷ் பென்டன்வில்லில் உள்ள தம் மனைவியைப் பார்க்கச் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மோதிய வேகத்தில் இந்தியர் நால்வர் சென்ற கார் தீப்பிடித்தது. அதனால், அடையாளம் காண முடியாத அளவிற்கு, அவர்களின் உடல்கள் கருகிப்போனதாகக் கூறப்பட்டது. கார் பகிர்வுச் செயலியின்மூலம் அந்நால்வரும் தங்களது பயணத்தைத் திட்டமிட்டனர். அச்செயலியின் துணைகொண்டு அதிகாரிகள் அவர்களை அடையாளம் கண்டனர்.