ஏழுமலையானின் பிறந்த நாள்

பெருமாளின் மற்ற அவதாரங்களை போலவே ஸ்ரீநிவாச அவதார தினத்தையும் திருப்பதி ஏழுமலையானின் பிறந்த தினமாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோர்கள். கிருஷ்ண ஜெயந்தி தான் நமக்கு தெரியும். ஏழுமலையானின் ஜெயந்தி தினம் எப்போது வருகிறது தெரியுமா? வாங்க தெரிந்து கொள்ளலாம்.

திருப்பதி ஏழுமலையான், பணக்கார கடவுள் என அனைவருக்கும் தெரியும். ஆனால் திருப்பதி ஏழுமலையானுக்கு எப்போது பிறந்த நாள் என்று தெரியுமா? மகாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரம் தோன்றிய தினத்தையும் கிருஷ்ண ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, வாமன ஜெயந்தி, கல்கி ஜெயந்தி, ராம நவமி என கொண்டாடுவதைப் போல் பெருமாள், கலியுகத்தில் வெங்கடேஷ சுவாமியாக அவதரித்த நாளையே திருப்பதி ஏழுமலையானின் பிறந்த நாளாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம்.

திருப்பதியில் நடக்கும் மிக முக்கியமான விசேஷங்களில் இதுவும் ஒன்றாகும்.திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டு 600 ஆண்டுகளுக்கு மேல் ஆவதாக புராணங்கள் சொல்கின்றன. கலியுகத்தில் பெருமாள், பூமியில் தன்னுடைய திருவடிகளை பதித்த மலை என்பதால் பெருமாளின் அருளை பெறுவதற்காக பக்தர்கள் திருமலையை தேடி செல்கின்றனர். இவரை வழிபடுவதால் வாழ்க்கையில் திருப்பம் வரும், செல்வம் சேரும், மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஏழுமலையானின் திருமேனி வெறும் சிலையாக இல்லாமல் உயிரோட்டம் நிறைந்ததாக இருப்பதால், மனதார திருப்பதி பெருமாளிடம் என்ன வேண்டினாலும் அது அவரது காதுகளில் விழும். அவர் அதை நிறைவேற்றி வைப்பார் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.

பலரின் இஷ்ட தெய்வமாகவும், குலதெய்வமாகவும் இருக்கும் திருப்பதி ஏழுமலையான், மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியிலேயே ஸ்ரீநிவாச பெருமாளாக அவதாரம் எடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் திருப்பதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருப்பதி பாலாஜி ஜெயந்தி டிசம்பர் 23ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. டிசம்பர் 22ம் தேதி மாலை 04.51 ம் தேதி துவங்கி, டிசம்பர் 23ம் தேதி மாலை 06.48 வரை அஷ்டமி திதி உள்ளது. இந்த நாளில் திருப்பதி ஏழுமலையானை கோவிலுக்கு சென்றும், வீட்டிலும் வழிபாடு செய்வதால் ஏழுமலையானின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here