தாவாவ்:
10 வயது சிறுவன் ஒருவன் நெற்றி, கன்னத்தில் வெட்டுக் காயம், பிட்டத்தில் காயங்கள், இடது காதுக்குப் பின்னால் ரத்தம் உறைதல் உள்ளிட்ட காயங்களுடன் தாவாவ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டான்.
குறித்த சிறுவன் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி அன்று, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அவனது ஆசிரியரால் அழைத்து வரப்பட்டபோது, அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பிற்பகல் 3 மணியளவில் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர் சந்தேகத்திற்கிடமான காயங்களைக் கண்டதையடுத்து காவல்துறையில் புகார் அளித்தார் என்று, மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் ஜாஸ்மின் ஹுசின் கூறியதுடன், இந்த சம்பவத்தை உறுதி செய்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் சொன்னார்.
முதற்கட்ட விசாரணையில், தாய்க்கு ஒரே பிள்ளையான சிறுவன், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயின் மரணத்திற்கு பின்னர் தனது அத்தையுடன் வசித்து வந்தான் என்பதும், அவன் உள்ளூர் மதப் பள்ளி ஒன்றில் மாணவன் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, பின்னர் மேலதிக விசாரணைகள் தொடரும் போது போலீஸ் நிலையத்திற்கு வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
“குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது” என்று ஜாஸ்மின் கூறினார்.
மேலும் தாவாவ் மருத்துவமனையில் சிறுவன் மேலதிக சிகிச்சை பெற்று வருவதையும் அவர் உறுதிப்படுத்தினார்.





















