வாழ்க்கையில் குறிப்பிட்ட காலம் வரை கடவுளிடம் பொருள் வேண்டி எத்தனையோ கோரிக்கைகளை, வேண்டுதல்களை முன் வைக்கிறோம். ஆனால் பல விதமான துன்பங்களை அனுபவித்து, மனம் சோர்ந்து, பக்குவ நிலையை அடைந்த பிறகு, இனி எதுவும் வேண்டாம்.
வாழ்ந்ததே போது என்ற மனநிலைக்கு வந்து முக்தியை அளிக்கும் படி இறைவனிடம் கேட்க துவங்கி விடுகிறோம். ஆனால் இறை நம்பிக்கையுடன் இறைவனை வழிபடுபவராக இருந்தாலும் சரி, இறைவனை வணங்காதவராக இருந்தாலும் சரி பல பிறவிகள் கொடுத்து, பலவிதமான துன்பங்களை கொடுத்து, அதற்கு பிறகு தான் இறுதியாக முக்தியை வழங்குகிறார் இறைவன்.
கடவுள் தான் சர்வ வல்லமை படைத்தவர் ஆயிற்றே. அவர் நினைத்தால் உடனடியாக முக்தியை அளித்து விடலாமே? எதற்காக பல பிறவிகள் கொடுத்து, பல விதமான துன்பங்களைக் கொடுத்து, அதற்கு பிறகு முக்தியை அளிக்கிறார் என்ற கேள்வி பலரின் மனதிலும் தோன்றும். நியாயமான கேள்வி என்றாலும் இந்த கேள்விக்கான சரியான பதிலை தெரிந்து கொள்வதற்கு முன் முதலில் முக்தி என்றால் என்ன என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இறைவனைப் போலவே சச்சிதானந்தமாய் இருத்தலே முத்தி நிலை. பேரானந்தத்தில் திளைத்தலே முக்தி நிலை. அது மெய்ஞானம் பெற்றால் கிடைக்கும். மெய்ஞானம் பெற்று பேரானந்தத்தில் திளைத்தலே முத்தி நிலை. ஒரு பூ வாடி விட்டால் அந்த குப்பையை, சருகை வெளியே போடு என்று தான் சொல்லுவோமே தவிர, யாரும் “அந்த மல்லிகையை எடுத்து வெளியே போடு” என்று சொல்ல மாட்டோம். ஏனெனில் அதன் வாசம் போய் விட்டது.
அதன் குணத்தை இழந்து விட்டது. குணம் அழிந்தால் அந்த குணத்தை உடைய பொருளும் அழியும். உயிருக்கும் ஒரு குணம் உண்டு. எதையும் படிப்படியாக அறிதல் என்பது தான் அது. மெய் அறிவையும் இதைப்போல படிப்படியாகத்தான் தர முடியும். எனவே கடவுள் அந்த மெய்ஞானத்தைப் பெறுகிற பக்குவத்தை நாம் அடைவதற்காகத் தான் இந்த பிறவியைத் தருகிறார்.