உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு எச்சரிக்கை; இல்லை பொருளாதார தடை விதிப்போம் என்கிறார் டிரம்ப்

வாஷிங்டன்:

உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். போரை நிறுத்தாவிட்டால், கடுமையான பொருளாதார தடைகள், அதிக வரிகள் விதிப்பு போன்ற நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என, அவர் கூறியுள்ளார்.

நேட்டோ எனப்படும் அமெரிக்கா, மேற்காசிய நாடுகள் இடம்பெற்றுள்ள வடக்கு அட்லாண்டிக் ஒத்துழைப்பு அமைப்பில் இடம் பெறுவதற்கு, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது, 2022 பிப்ரவரியில் போரை துவங்கியது ரஷ்யா; மூன்று ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், போர் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் சமீபத்தில் பதவியேற்றார். தேர்தல் பிரசாரத்தின்போதும், அதன் பிறகும், ரஷ்யாவின் இந்த போருக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். தான் அதிபரானதும், ஒரே நாளில் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக அவர் கூறியிருந்தார்.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே பல பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து சமீபத்தில் விலகிய ஜோ பைடன் அரசு, உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டது; நிதியுதவி அளித்ததுடன், ஆயுதங்களையும் வழங்கியது.

ஆனால், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தப் போவதாக டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். மேற்காசியாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போரை நிறுத்த, சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதுபோல, ரஷ்யா – உக்ரைன் போரையும் நிறுத்துவதில் டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் டிரம்ப் கூறியுள்ளதாவது: நான் அதிபராக இருந்திருந்தால், இந்த போர் ஏற்பட்டிருக்கவே இருக்காது. இந்த அபத்தமான போரை உடனடியாக நிறுத்த வேண்டும். இதை எளிதாகவும் செய்யலாம், கடினமாகவும் செய்யலாம். ஆனால் எளிமையாக போரை நிறுத்துவதே சரியானது. உடனடியாக ஒரு ஒப்பந்தம் செய்வோம். இதற்கு மேல் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது.

ரஷ்ய அதிபர் புடின் உடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது; அவரை மதிக்கிறேன். ரஷ்ய மக்களை விரும்புகிறேன். இரண்டாம் உலகப் போரில் நமக்கு ரஷ்யா உதவியது. அந்தப் போரில் ஆறு கோடி பேரை ரஷ்யா இழந்தது.

தற்போதைய இந்த போர் அபத்தமானது. உடனடியாக அதை நிறுத்துவதற்கு ரஷ்யா முன் வர வேண்டும். அவ்வாறு வராவிட்டால், எங்களுக்கு வேறு வழியில்லை. ரஷ்யா மீது அதிக பொருளாதார தடைகள், கடுமையான வரிகள், அபராதங்கள் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here