குபாங் பாசு:
ஜித்ராவிலுள்ள கம்போங் பாயா முயுத், ஜாலான் குவார் நபாயில் கோழிப் பண்ணையாகப் பயன்படுத்தப்பட்ட இரண்டு மாடி கட்டிடத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ சம்பவத்தில் சுமார் 48,000 கோழிகள் கருகி உயிரிழந்தன.
குறித்த சம்பவம் தொடர்பில் இரவு 11 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் முகமட் புஸ்தான் கருடின் கூறினார்.
தமது குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, “கோழிப் பண்ணையாகச் செயல்படும் இரண்டு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது என்றும், அப்பண்ணையில் மொத்தம் 50,000 கோழிகள் இருந்ததாகவும், இந்த தீயில் சுமார் 48,000 கோழிகள் இறந்தன,” என்றும் அவர் சொன்னார்.
இந்த தீ விபத்து காரணமாக குறித்த பண்ணை 80 விழுக்காடு அழிந்தது என்றும், இன்று அதிகாலை 12.46 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் முகமட் புஸ்தான் கூறினார்.
“தீ விபத்துக்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்புகள் இன்னும் விசாரணையில் உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.