15 மணி நேர செய்தியாளர் மாநாடு; உலக சாதனை படைத்தார் மாலத்தீவு அதிபர்

மாலே:

மாலத்தீவுகளின் அதிபர் 15 மணிநேரத்துக்கு செய்தியாளர் கூட்டம் நடத்தியதாக அவரின் அலுவலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 4) தெரிவித்தது.

அதிபர் முகமட் முயிஸு நடத்திய செய்தியாளர் கூட்டம், உலக வரலாற்றில் ஆக அதிக நேரம் நீடித்த செய்தியாளர் கூட்டமாகும்.

முன்னதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நடத்தியிருந்த செய்தியாளர் கூட்டம்தான் ஆக அதிக நேரம் நீடித்தது.

முயிஸு, சனிக்கிழமை (மே 3) காலை 10 மணிக்கு செய்தியாளர் கூட்டத்தைத் தொடங்கினார். அக்கூட்டம் பிறகு 14 மணிநேரம் 54 நிமிடங்கள் நீடித்தது; நடுநடுவே தொழுகைக்காக சிறிது நேரம் நிறுத்தப்பட்டது என்று அவரின் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்தது.

“அந்தக் கூட்டம் நண்பகலுக்குப் பிறகும் நீடித்தது. இது, ஓர் அதிபருக்கான உலகச் சாதனையாகும். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அதிபர் முயிஸு தொடர்ந்து பதிலளித்துவந்தார்,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

முன்னதாக, 2019ஆம் ஆண்டில் உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி 14 மணிநேரம் செய்தியாளர் கூட்டம் நடத்தியதாக அந்நாட்டின் தேசியப் பதிவுகள் அமைப்பு தெரிவித்திருந்தது. அதுவே உலகச் சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை முறியடித்துள்ளார் மாலத்தீவு அதிபர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here