எப்போது தீரும் குடியுரிமை பிரச்சினை? சொந்த நாட்டில் நாடற்றவர்களாக வாழும் அவலம் தொடர்கதையா?

 

ரெ. மாலினி

எப்போது தீரும் குடியுரிமைப் பிரச்சனை ? விடியாத  பொழுதாய் விடியலை நோக்கி அல்லாடிக் கொண்டிருக்கும்  நாடற்றவர்களின்  சிக்கல்கள் இன்று வரை  இந்த மண்ணில்   அதிகரித்துக் கொண்டே போகிறது.

மலேசியாவில் நாடற்றவர்களாகக் கருதப்படும் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்களோ, அகதிகளோ, அல்லது சட்ட விரோத குடியேறிகளோ அல்லர் மாறாக அவர்கள். மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்கள்தான் .

குறிப்பாக இந்த குடியுரிமை விவகாரம் இந்தியர்களின் முகத்தை மாற்றும் அளவிற்கு சட்டத்தில் மாற்றம் வருமா? அல்லது இன்னும்  இது மேலும் ஒரு  தொடர் சங்கிலியாக இருக்குமா என விடை தெரியாத விஷயமாக உள்ளது.

இந்தியர்களை தவிர்த்து சபா மாநிலத்தில் மட்டுமே  பல ஆண்டுகளுக்கு முன்பு ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாடற்றவர்களாக இருக்கலாம் என்று ஒரு ஆய்வில் கூறப்பட்டது. இப்படி நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் குடியுரிமை இன்றி, நாடற்றவர்களாக உள்ளனர் என்பது  மலேசிய போன்ற வளர்ச்சி அடைந்த நாட்டுக்கு ஒரு கலக்கமான விஷயமாக திகழ்கிறது.

எழுபது வயதைக் கடந்த சிலருக்கு மலேசிய அரசு அண்மை காலத்தில் குடியுரிமை வழங்கியுள்ளது. இந்த தாமதம் காரணமாக அந்த நபரின் பிள்ளைகள், பேரக் குழந்தைகள் ஆகியோரும் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய முடியாமல், பிறப்பு பத்திரம் பெற முடியாமல், அடுத்த தலைமுறை நாடற்றவர்களாக துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பிறந்த நாட்டில் குடியுரிமைக்காக விண்ணப்பித்து ஆண்டுகள் பல ஆகியும் தேசிய பதிவு இலாகா எவ்வித  நடவடிக்கையும் எடுக்காதது  மேலும் அதிகமான சிக்கல்களை உருவாக்கி வருகிறது. முடிவு அமைச்சரின் கையில் தன உள்ளது என ஒவ்வொரு முறையும் தட்டி கழிக்கப்படும்போது விண்ணப்பம் செய்த தரப்பினரின் மனோ நிலையை அரசாங்கம் கவனித்தில் கொள்ள மறுப்பது மிக வேதனையானது.

அரசாங்கம் குடியுறுமை பிரச்சினைகளை தீர்ப்பதில் அலட்சியமும் தாமதமும் காட்டி வருவது ஏன் என்று பலரின் கேள்வியாக உள்ளது. இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சு இது வரை என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது? அதற்கான பதிலை அமைச்சு மக்களுக்கு தர இயலுமா?

 குடியுரிமைக்காக விண்ணப்பித்து 15 ஆண்டுகளுக்கு மேலாகியும்  நிலுவையிலுள்ள வழக்குகள், வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள், வெளிநாட்டு ஆண்களை மணந்த உள்ளூர்,வெளி நாட்டு பெண்கள் உள்ளூர் ஆண்களை மணந்து பெற்றெடுத்த குழந்தை உள்ளிட்ட விஷயங்களில் இன்னும் தீர்க்கப்படதாக பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. பெற்றோருக்கு குடியுரிமை இல்லாததால், பிள்ளைகளுக்கு அந்த உரிமை கிடைக்கவில்லை. தகுந்த ஆவணங்கள் இல்லாதது, வறுமை, வீட்டிலேயே பிரசவமாவது, பதிவு செய்யாத திருமணங்கள், கைவிடப்பட்ட குழந்தைகள், அறியாமை, ஆதரவற்ற குழந்தைகளை உரிய ஆவணங்கள் இன்றி தத்தெடுப்பது போன்ற பல்வேறு காரணங்களால் பலருக்கு குடியுரிமை கிடைப்பதில்லை.

10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சிறுமி மலேசிய குடியுரிமைக்காக காத்திருக்கும் போது அச்சிறுமியின் எதிர்காலம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை அரசாங்கம் ஏன் ஆய்வு செய்யவில்லை. ஆரம்பப் பள்ளி முடிந்து இடை நிலைப்பள்ளி காலம் முடிந்து அந்த பெண்ணோ அல்லது ஆண் மகனோ தனது உயர் கல்வியை படிப்பதிலும் வேலைக்குச் செல்வதிலும் மிகுந்த சிக்கலை எதிர் நோக்குகின்றனர்.

சொந்தப் பெயரில் வங்கிக் கணக்கு திறக்க முடியாது. அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சைப் பெற முடியாது, வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது.  சராசரி  நாட்டு மக்களுக்கு கிடைக்க கூடிய அரசாங்கம் சலுகைகள் இல்லை, சொந்த மண்ணில்  அகதியை போல் வாழும் தர்ம சங்கடமான சூழ் நிலையை அவர்கள் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. குடிமகன்  என்ற தகுதி, இறையான்மையுள்ள நாட்டின் அரசியல் சட்டத்தால், கடமைகளும் பொறுப்புகளும் ஒரு நபருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.  அந்த உரிமை இல்லாமல் வாக்குரிமை கூட இல்லாமல் தவிக்க வேண்டி உள்ளது.

அண்மையில் மக்கள் ஓசை  தனது  டிக் டோக்  பதிவில் 22 வயது இளம் பெண்ணான மாதவி த/பெ ஜெயகுமார் தனக்கு அரசாங்கம் குடியுரிமை வழங்க மறுப்பதால் பெருத்த மன உளைச்சலை எதிர் கொண்டு உள்ளதாகவும் இதனால் வாழவே தனக்கு விருப்பம் இல்லை எனவும் மிகுந்த மனவேதனையுடன் பேசியிருந்த  காணொளி   நாட்டு மக்களின்  கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

எதற்காக இவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது? இதற்கான தீர்வை அரசாங்கம் எப்போதுதான்  எடுக்கும்? மாதவியை போல் இன்னும் பல இந்தியர்கள் குடியுரிமை கிடைக்காமல் தங்களது  எதிர்காலத்தை இழந்து தவித்து வருவதை அரசாங்கம் கவனித்தில் கொள்ளுமா?

குறிப்பாக இந் நாட்டில் குடியுரிமையின்றி வாழும் இந்தியர்களின் விண்ணப்பங்கள் மட்டும் நீண்ட காலம் பரிசீலனையில் இருப்பதற்கான காரணம் தான் என்ன? என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

மடானி அரசாங்கத்தின் கீழ் பிரதமர் இப்பிரச்சினையை களைவதற்கு அவை குறித்து ஆராய்வதற்கு தனிக்குழு அமைத்து  தக்க முடிவை எடுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here