டிரம்ப்பின் கருத்துப் பதிவால் படுவீழ்ச்சியடைந்த டெஸ்லா நிறுவனப் பங்குகள்

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பெருஞ்செல்வந்தர் இலோன் மஸ்கின் நிறுவனங்களுடன் உள்ள அரசாங்க ஒப்பந்தங்களை ரத்து செய்யப்போவதாக மிரட்டியதை அடுத்து, டிரம்ப்பைப் பதவியிலிருந்து நீக்குவதற்குரிய அரசியல் குற்றஞ்சாட்டு சுமத்தப்பட வேண்டும் என்று மஸ்க் பதிலுக்குக் கூறியுள்ளார்.

முன்னதாக இவ்விருவருக்கும் இடையே நிலவிய நெருக்கமான நட்புறவு இத்தகைய வாக்குவாதத்தில் முடிந்துள்ளது.

வெள்ளை மாளிகையிலிருந்து டிரம்ப், தாம் நிறுவிய ‘ட்ரூத் சோ ஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவில் கருத்து ஒன்றிலிருந்து இந்தப் பிரச்சினை தொடங்கியது.

“வரவு செலவுத் திட்டத்தில் பில்லியன் கணக்கான பணத்தைச் சேமிக்க ஆக எளிதான வழி, இலோனுக்கு வழங்கப்பட்ட அரசாங்க விலைக்கழிவுகளையும் ஒப்பந்தங்களையும் நீக்குவதாகும்,” என்று டிரம்ப், தமது ‘ட்ரூத் சோ ஷியல்’ தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

டிரம்ப்பின் பதிவு வெளிவந்ததை அடுத்து மஸ்கின் டெஸ்லா நிறுவனப் பங்குகளை வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தை வர்த்தகர்கள் கணிசமான அளவில் கைவிட்டனர்.

இதனால் டெஸ்லாவின் பங்கு விலைகள் 14 விழுக்காடு சரிந்து அந்நிறுவனம் கிட்டத்தட்ட 150 பில்லியன் வெள்ளியை இழந்தது. டெஸ்லாவின் வரலாற்றில் இது ஆகப் பெரிய ஒரு-நாள் இழப்பாக உள்ளது.

பேரிடியுடன் பங்கு விலைகள் வியாழக்கிழமை முடிந்ததை அடுத்து, டிரம்ப் மீது அரசியல் குற்றஞ்சாட்டு சுமத்தப்பட வேண்டும் என ‘எக்ஸ்’ தளத்தில் கோரிய பதிவு ஒன்றுக்கு ‘ஆம்’ என்று மஸ்க் பதிவிட்டார்.

இருந்தபோதும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளில் பெரும்பான்மை கொண்டுள்ள டிரம்ப்பின் குடியரசுக் கட்சி, அத்தகைய குற்றச்சாட்டை அவர்மீது சுமத்தும் வாய்ப்புகள் குறைவு.

இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மஸ்க் குறித்து ஆழ்ந்த வருத்தத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.

“இலோனுக்கும் எனக்கும் நல்ல உறவு இருந்தது. இனி இருக்குமா எனத் தெரியவில்லை,” என்று டிரம்ப் கூறினார்.

டிரம்ப் பேசியதைத் தொடர்ந்து திரு மஸ்க் தம் பங்கிற்கு ஆவேசம் மிகுந்த பதிவுகளை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டார்.

“நான் இல்லாமல் டிரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்திருப்பார். என்ன நன்றிகெட்டத்தனம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here