ஈப்போ,
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் KM316.9 பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில், இரண்டு சீன பிரஜைகள் உயிரிழந்தும், ஒரு உள்ளூர் ஓட்டுநர் காயமடைந்தும் உள்ளனர்.
விபத்து தொடர்பான தகவல் இரவு 10.30 மணியளவில் கிடைத்ததாகவும், சம்பவ இடத்தில் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் சோங் ஹோங் மற்றும் யுசெங் பான் (இருவரும் 41 வயது) உயிரிழந்ததாகவும் தாப்பா மாவட்ட காவல்துறை தலைவர் ஜொஹாரி யாக்யா கூறினார்.
விபத்தில் டொயோட்டா வியோஸ் வாகனத்தை ஓட்டிய லாவ் யோங் கெங் (56) கழுத்து, காலை மற்றும் கைகளில் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார்.
முதல்கட்ட விசாரணையில், கோலாலம்பூரில் இருந்து பினாங்குக்கு வலது பக்க பாதையில் சென்ற வாகனம், எதிர்பாராத விதமாக முன்னால் பாதையை மாற்றியபொது லோரியை தவிர்க்க முயன்றதனால், டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தது தெரியவந்துள்ளது.
லோரி டிரைவரை அடையாளம் காணும் முயற்சிகள் மற்றும் கேமரா காட்சிகளைப் பெறும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் தாப்பா மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்த விபத்து, சாலை போக்குவரத்து சட்டத்தின் 1987-ம் ஆண்டு சட்டம் 41(1) பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இந்த விபத்திற்கான அவசர அழைப்பு இரவு 8.53 மணிக்கு வந்தது. இதையடுத்து தப்பா தீயணைப்பு நிலையத்திலிருந்து குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் உதவி இயக்குனர் சபரோதி நோர் அஹ்மட் தெரிவித்தார்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வாகனத்தில் சிக்கி இருந்த நிலையில், அவர்களை மீட்க சிறப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டு, பிறகு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறினார்.
























