ஆடி மாதம் அம்மன் மாதமாக போற்றப்படுகிறது. இந்த மாதத்தில் அன்னை பராசக்தியை மட்டுமன்றி, நீராகவும் இருந்து மக்களை காக்கும் காவிரி தாயையும் பக்தர்கள் வழிபட்டு, நன்றி தெரிவிக்கும் நாள் தான் ஆடிப் பெருக்கு திருநாள்.
நம் மலசியாவிலும் போர்டிக்சன் மோரிப், கோலசிலாங்கூர் ஜெராம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இந்த ஆடிப்பெருக்குவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் மற்ற அனைத்து விசேஷங்களும் கிழமை, நட்சத்திரம், திதி ஆகியவற்றின் அடிப்படையில் தான் சிறப்புடையதாக கொண்டாடப்படும். 18 என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் கொண்டாடப்படும் ஒரே விசேஷம் ஆடிப்பெருக்கு மட்டும் தான்.பொதுவாக ஆடி மாதத்தில் சுப காரியங்கள் எதுவும் செய்ய மாட்டார்கள்.
ஆனால் ஆடிப்பெருக்கு தினத்தில் நல்ல காரியங்கள், தொழில், வியாபாரம், திருமண பேச்சுக்கள் ஆகியவற்றை துவங்குவார்கள். அதே போல் புதிய சொத்துக்கள், பொருட்கள் வாங்குபவர்களும் இந்த நாளில் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான நாட்களில் ஒன்று ஆடிப்பெருக்கு. ஆடி மாதத்தின் 18வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனால் இதை ஆடி 18ம் பெருக்கு என்று மக்கள் சொல்லுவது உண்டு. இந்த நாளுக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு?
இந்த நாளை மட்டும் ஏன் கொண்டாட வேண்டும் என்றால் ஆன்மிகத்தில் மட்டுமன்றி இலக்கியத்திலும் 18 என்ற எண்ணுக்கு தனிச்சிறப்பு உண்டு. தமிழில் உள்ள இலக்கிய நூல்களின் எண்ணிக்கை 18, புராணங்கள் 18, பாரதப் போர் நடைபெற்ற நாட்கள் 18, மகாபாரதத்தில் உள்ள அத்தியாயங்கள் 18, பகவத் கீதையில் உள்ள பிரிவுகள் 18, சபரிமலையில் உள்ள படிகள் 18, கணங்கள் 18. இப்படி 18 என்ற எண்ணிற்கு ஏராளமான சிறப்புகள் உள்ளது. அதனால் ஆடி மாதத்தில் வரும் 18 ம் நாளும் மிகவும் சிறப்பு பெற்றதாகும். இந்த நாளிலேயே பாரதப் போர் நிறைவடைந்து, பாண்டவர்கள் வெற்றி பெற்றதாக சொல்லப்படுகிறது.
பஞ்சபூதங்களில் முக்கியமானது நீர். நீரில் இருந்தே உயிர்கள் தோன்றியதாக சொல்லப்படுகிறது. அதனால் நீரை போற்றி, வணங்கி, நீருக்கும், ஆறுகள் போன்ற நீர் நிலைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது. மற்ற நாட்களில் வறண்டு கிடக்கும் ஆறுகள் ஆடிப்பெருக்கின் போது பொங்கி, பெருகி வருவது வழக்கம். அதனால் இந்த நாளில் எதை துவங்கினாலும் அது பல மடங்காக பெருகி, நமக்கு வெற்றியை தரும் என்பது ஐதீகம்.
ஆறு நீரையும், மழையையும் மட்டுமே நம்பி விவசாயம் செய்த காலம் என்று ஒன்று இருந்தது. அந்த சமயங்களில் ஆடி மாதம் விவசாய பணிகளை துவங்க செல்லும் விவசாயிகள் நில மகளையும், நீர் மகளையும் வணங்கி விட்டு, மண் செழித்து, விவசாயம் செழித்து, எங்கள் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்ளும் நாளாக ஆடிப் பெருக்கு திருநாள் கொண்டாடப்படும் வழக்கம் ஏற்பட்டது.
ஆடிப் பெருக்கு தினத்தில் அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு சென்று சித்ராண்ணங்கள், பழங்கள் படைத்து, தீப தூப ஆராதனை காட்டி வழிபடுவார்கள். ஆற்றுக்கு பூக்கள் தூவி வழிபடுவார்கள்.
திருமணமான புதுமண தம்பதிகள் ஆற்று நீரோடு தங்களின் திருமண மாலையை அனுப்பி, தங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக, சிறப்பாக அமைய வேண்டும் என்றும், ஆற்றில் நீர் பெருகி வருவதை போல் தங்களின் வாழ்க்கையில் அனைத்து வளங்களும் பெருகி, வம்சம் தழைத்து வளர வேண்டும் என்றும் வேண்டிக் கொள்வார்கள். திருமணமான பெண்கள் மூத்த சுமங்கலிகள் கைகளால் தாலி சரடு மாற்றி அவர்களிடம் ஆசி பெற்றுக் கொள்வார்கள்.
ஆறு அருகில் இல்லாதவர்கள், வீட்டில் ஒரு சொம்பில் தண்ணீர் பிடித்து அதில் சிறிதளவு மஞ்சள், பூ போட்டு பூஜை அறையில் வைத்து, விளக்கேற்றி வழிபட வேண்டும். ஏதாவது இனிப்பு செய்து வைத்து அல்லது துல்லு மாவு வெல்லம் கலந்தோ அல்லது பச்சரிசியில் வெல்லம் கலந்து காப்பரிசி செய்து வைத்தோ படைப்பார்கள். என்ன பழம் கிடைக்கிறதோ அதை வாங்கி வைத்து, வெற்றிலை பாக்கு, பூ ஆகியவை வைத்து, வீட்டில் இருக்கும் இந்த நீரில் எழுந்தருளி எங்களுக்கு அருள் செய்ய வேண்டும் என கங்கை, காவிரி நதிகளை மனதில் நினைத்து வேண்டிக் கொண்டு, தங்களின் வாழ்க்கையில் நன்மை நடக்க வேண்டும் என்றும், தாங்கள் துவங்கும் செயல்கள், முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ள வேண்டும்.
நாளை ஆடிப்பெருக்கு. ஆடிப்பெருக்கில் அனைவர் வாழ்விலும் சகல சௌபாக்கியங்களும் பெருகிட நல்வாழ்த்துகள்.




















