மலேசியாவின் முதலாவது சதுரங்க கிராண்ட் மாஸ்டர்: 25 வருடங்களுக்குப் பிறகு யோ லி தியான் வரலாற்றுச் சாதனை

கோலாலம்பூர்:

மலேசிய சதுரங்க வரலாற்றில் முதன்முறையாக, உலகின் மிக உயர்ந்த சதுரங்க பட்டமான கிராண்ட் மாஸ்டர் (GM) பட்டம் நம்மவர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த 25 வயதான யோ லி தியான், இன்று நடைபெற்ற GM-IM இன்பிடேஷனல் சதுரங்க சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் வெற்றி பெற்று, தனது மூன்றாவது ‘ norm’ பெற்றதோடு, FIDE மதிப்பீட்டில் 2500 புள்ளிகளைத் தாண்டியதன் மூலம், இந்த GM பட்டத்தை அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளார்.

இந்த பட்டம், அனைத்துலக சதுரங்க சம்மேளனம் (FIDE) மூலம் வழங்கப்படுவது மட்டுமல்லாது, வாழ்நாள் முழுவதும் செல்லும் ஒரு கௌரவமாகும். உலகளவில் 2,000க்கும் குறைவானவர்கள்தான் இதனை பெற்றுள்ளனர்.

“நான் என் குழந்தைப் பருவத்தையே அனுபவிக்காமல் விட்டுவிட்டேன். பள்ளி செல்வதும், வீடு வந்ததும், வீட்டுப்பாடங்களை முடித்ததும், உடனே சதுரங்கத்தில் பயிற்சியில் ஈடுபடுவேன் – இது தான் என் வாழ்க்கை,” எனத் தனது பயணத்தைப் பற்றி லி தியான் பகிர்ந்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஹனோயில் நடந்த SEA விளையாட்டுகளில் இறுதிக்கணத்திலே இந்த சாதனையைத் தவறவிட்டதால், இன்று மலேசிய மண்ணில் இதைப் பெறுவது “மிகவும் நிம்மதியும் மகிழ்ச்சியும் தரும் தருணமாக இருந்தது” என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்த சாதனை இன்னும் பலரை சதுரங்கம் விளையாட ஊக்குவிக்கும்” என்ற நம்பிக்கையும் அவர் தெரிவித்தார்.

மேலும் “இந்த சாதனையை ஒரு ஆரம்பமாகக் கொண்டு, மலேசியாவில் மேலும் கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகும் விதமாக MCF உறுதியுடன் செயல்படும்,” என்றும், “இந்த சாதனை, நாட்டில் சதுரங்க விளையாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய நேர்மறையான அத்தியாயம். இது இங்கேயே நிறுத்தாமல், இந்தியா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற அண்டை நாடுகளைப் போல, மலேசியாவிலும் மேலும் GM-கள் உருவாக வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here