பினாங்கு கப்பளா பாத்தாஸ் பேரணி ரத்து – ஆரோக்கியமற்ற மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க போலீஸ் அறிவுறுத்தல்

கோலாலம்பூர்,

எதிர் குழுக்களுக்கிடையே ஆரோக்கியமற்ற மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, பினாங்கு மாநிலத்தின் கப்பளா பாத்தாஸ், பெர்த்தாமில் இன்று நடைபெறவிருந்த பேரணியை ரத்து செய்யுமாறு அரச மலேசிய போலீஸ் படை அறிவுறுத்தியுள்ளது.

தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ முகமது காலிட் இஸ்மாயில் கூறியதாவது, உள்ளூர் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை பாதிக்கும் சாத்தியம் உள்ள ஒவ்வொரு பிரச்சினையையும் காவல்துறை கடுமையாகக் கருதுகிறது. ஆகஸ்ட் 14ஆம் தேதி கப்பளா பாத்தாஸ், பெர்த்தாமில் நடைபெறவிருந்த பேரணி குறித்து நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம்,” என அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலான, ஜாலூர் ஜெமிலாங் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் 38 புகார்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 17 புகார்கள் பினாங்கில் மற்றும் 21 புகார்கள் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அச்சம்பவத்தை பதிவுசெய்து பரப்பியவர்களுக்கு எதிராக 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விசாரணை ஆவணங்கள் கடந்த திங்கட்கிழமை பினாங்கு அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு தற்போது ஆய்வில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சமூகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக வெளிப்படையான மற்றும் சட்ட விதிகளின்படி விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், விசாரணையை பாதிக்கக்கூடிய ஊகங்களைக் கிளப்பாமல், உண்மையான தகவல்களை காவல்துறைக்கு வழங்குமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here