தரமற்ற துணி என்ற குற்றச்சாட்டு இருந்தபோதும் – செவிலியர் சீருடை துணி ஒப்பந்தம் ஆண்டு இறுதி வரை நீட்டிப்பு

கோலாலம்பூர்:

செவிலியர் சீருடைக்கான துணி தரம் குறைவாக இருப்பதாக கடந்த ஆண்டு எழுந்த குற்றச்சாட்டுகளையும் மீறி, சுகாதார அமைச்சகம் (MOH) RM98.3 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை. இவ்வொப்பந்தம் இவ்வருடம் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் என்று அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுல்கிஃப்லி அகமட் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதிலளிப்பில் தெரிவித்தார்.

“சுகாதார அமைச்சகத்தின் பல்வேறு சேவைத் துறைகளுக்கான சீருடை துணி விநியோக ஒப்பந்தம் இவ்வருடம் டிசம்பர் 31 வரை தொடர்கிறது. தரநிலைக்கு ஏற்ப இல்லாத துணி விநியோகிக்கப்பட்டால், நிறுவனம் அதை மாற்றிக் கொடுக்க வேண்டும். மேலும், காலக்கெடுவை மீறினால் அபராதமும் விதிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

குறைந்த தரம் கொண்ட துணி வழங்கிய நிறுவனம் மீதான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதா என்று, பகான் எம்.பி. லிம் குவான் எங் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

அமைச்சகத் தகவலின்படி, இவ்வருடம் மட்டும் 3,281.2 மீட்டர் துணியை குறித்த நிறுவனம் மாற்றிக் கொடுத்துள்ளது. 2023 மற்றும் 2024-ல் மாற்றம் எதுவும் கேட்கப்படவில்லை. மேலும், ஒப்பந்தக் காலத்தில் தாமதமான விநியோகத்துக்காக அந்தநிறுவனம் RM665,334.95 அபராதம் கட்டியுள்ளது என்றார்.

மேலும் “நிறுவனத்துக்கு பல முறை எழுத்து மூலம் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை எனில் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை அவர்கள் மாற்றுத் துணி வழங்கியுள்ளதால், ஒப்பந்தம் தொடர்கிறது,” என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரியில், குறைந்த தரம் கொண்ட துணியை பயன்படுத்தியதற்காக Peluang Kristal (M) Sdn Bhd நிறுவனத்திடம் MOH மாற்று சீருடைகள் கேட்டிருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற விசாரணையில், துணி தேவையான தர அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை என்று உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here