மலேசியாவின் இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஸிஸான், RON95 ரக பெட்ரோலுக்கான இலக்கிடப்பட்ட மானியத் திட்டம் செப்டம்பர் 2025-இன் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதிப்படுத்தினார்.
தற்போதுள்ள பொது மானிய முறைக்குப் பதிலாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.
இதுகுறித்து, நாடாளுமன்றத்தில் பேசிய அவர், இந்த மாற்றம் பொதுமக்களைப் பாதிக்காது என்று கூறினார். குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட குழுக்களைப் பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். அதே சமயம், அரசாங்கத்தின் நிதிச் சுமையையும் இது குறைக்கும் என்று அவர் கூறினார்.
இந்த மானியத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ளவர்கள் MyKad, e-walletகள், பெட்ரோலிய நிறுவனங்களின் செயலிகள் (apps) மூலம் மானியத்தைப் பெறுவதற்கான வழிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.
வெளிப்படைத்தன்மை, பலன்கள்,
இந்தத் திட்டம் குறித்துச் சரிபார்ப்பதற்கும், கருத்துகளைத் தெரிவிப்பதற்கும், மேல்முறையீடு செய்வதற்கும், ஒரு பிரத்யேக இணையத்தளமும் அழைப்பு மையமும் அமைக்கப்படும்.
இதன் மூலம், திட்டத்தில் வெளிப்படைத்தன்மையும், அணுகல் தன்மையும் உறுதி செய்யப்படும்.
இலக்கிடப்பட்ட மானியத் திட்டத்தால் கிடைக்கும் சேமிப்பு, மக்கள் நலத் திட்டங்கள், சுகாதாரம், கல்வி, பொதுப் போக்குவரத்து மேம்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று அமீர் ஹம்சா மேலும் தெரிவித்தார்.





















