திருவனந்தபுரம்:
சபரிமலை கோவிலில் இருந்து நான்கு கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை (VACB) வழக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அக்கோவிலில் உள்ள துவாரபாலகர் சிலைகளுக்கு 1999ஆம் ஆண்டு தங்கக் கவசங்கள் பொருத்தப்பட்டன. அந்த கவசங்கள் 40 ஆண்டுகள் வரை நிலைத்து இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், 2019ஆம் ஆண்டில் அவற்றின் எடை திடீரென குறைந்திருப்பது தெரியவந்தது. பழுது ஏற்பட்டதால் கவசங்கள் சென்னைக்கு பழுது பார்த்து சரிசெய்ய அனுப்பப்பட்டபோது, எடையிட்டதில் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.
இதற்கிடையில், நீதிமன்ற அனுமதியின்றி துவாரபாலகர் சிலைகளில் இருந்து தங்கக் கவசங்கள் அகற்றப்பட்டன என்பதில் கேள்விகள் எழுந்தன.
கேரளா உயர் நீதிமன்றம், சென்னையில் இருந்த கவசங்களை மீண்டும் கேரளாவுக்கு கொண்டுவர முன்பே உத்தரவிட்டது. அப்போது செய்யப்பட்ட ஆய்வில்தான் தங்கக் குறைவு உறுதிப்படுத்தப்பட்டது.
தற்போது, இவ்விபரீதம் குறித்து முழுமையான விசாரணை நடத்த சபரிமலை கோவிலிடம் இருந்து தேவையான தகவல்களை சேகரிக்க, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





















