சபா சட்டமன்றம் அடுத்த வாரம் கலைக்கப்படலாம்

கோத்தா கினபாலு:

சாபா மாநில சட்டமன்றம் அடுத்த வாரம் கலைக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. மாநில முதலமைச்சர் ஹஜிஜி நூர், வருகிற திங்கட்கிழமை (அக்டோபர் 6) இந்த அறிவிப்பை வெளியிடலாம் என தி ஸ்டார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கடந்த புதன்கிழமை (அக்டோபர் 1) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, மாநில அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் பிரியாவிடை அளித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.

ஆளும் கபுங்கன் ரக்யாத் சாபா (GRS) கூட்டணியிலிருந்து சாபா ஸ்டார் கட்சியும் சாபா முன்னேற்றக் கட்சியும் விலகியதால் அறிவிப்பு தாமதமாகியிருக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஜிஆர்எஸ்–பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியை வழிநடத்தும் திரு ஹஜிஜி, சட்டமன்றத்தை கலைக்க மாநில ஆளுநர் மூசா அமானின் ஒப்புதலை ஏற்கனவே நாடியிருப்பதாக மூத்த அரசியல்வாதி ஒருவர் குறிப்பிட்டார். இதன் மூலம் 17வது மாநிலத் தேர்தலுக்கான பாதை திறக்கப்படும்.

சாபா சட்டமன்ற நாயகர் கட்ஸிம் யாஹ்யா, தற்போதைய சட்டமன்றத்தின் தவணைக்காலம் வரும் நவம்பர் 11 (2025) அன்று முடிவடையும் என முன்பு தெரிவித்திருந்தார். 16ஆம் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தை ஆளுநர் 2020 நவம்பர் 12 அன்று தொடங்கினார். எனினும் அதற்கு முன், 2020 செப்டம்பரில் நடைபெற்ற திடீர் தேர்தலைத் தொடர்ந்து, அந்த ஆண்டு அக்டோபர் 9 அன்று சிறப்பு கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஆனால் அதனை முதல் கூட்டமாகக் கருதக் கூடாது என அவர் விளக்கியிருந்தார். மாநில அரசமைப்புச் சட்டம் இவ்விஷயத்தில் தெளிவாக இல்லை என கவனிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில், சாபா சட்டமன்றம் கலைக்கப்படும் என்ற வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதுகுறித்து செய்தியாளர் கூட்டம் நடத்தப்படும் நேரம் குறித்து, “சரியான சமயத்தில் அறிவிக்கப்படும்” என முதலமைச்சர் ஹஜிஜியின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here