கோலாலம்பூர், அக்டோபர் 10 –
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்ஃப்ளூவான்ஸா போன்ற நோய் (ILI) பாதிப்புகள் திடீரென அதிகரித்துள்ளதை அடுத்து, கல்வி அமைச்சு (MOE) அனைத்துப் பள்ளிகளுக்கும் புதிய தடுப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
குறிப்பாகச் சிலாங்கூரில் மட்டும், ஒரு வாரத்தில் நோய்த்தொற்றுகள் 80 விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர் கல்வி நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
அமைச்சின் பள்ளிகளுக்கான சுற்றறிக்கை,
அறிகுறிகள் உள்ள மாணவர்களைத் தனிமைப்படுத்துதல்,
அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதை உறுதிசெய்தல், முழுமையாகக் குணமடையும் வரை வீட்டிலேயே இருக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்துதல்,
ஆசிரியர்கள் முகக்கவசம் அணிதல் மேலும் சுகாதாரப் பழக்கங்களை ஊக்குவித்தல். மேலும், விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு அறிகுறிகள் காணப்பட்டால், அவர்கள் மருத்துவ அறைகளில் (sick bays) தனிமைப்படுத்தப்பட வேண்டும் போன்றவை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் பரவலைக் கண்காணிக்கவும், மாணவர்கள், பணியாளர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், கல்வி அமைச்சு சுகாதார அமைச்சகத்தின் நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.



















