குவாந்தான்:
உயர் கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் PTPTN எனப்படும் தேசிய உயர் கல்வி நிதியகம் கல்விக்கு உத்தரவாதம் அளிப்பதை உறுதி செய்வதற்கு பல்வேறு உயர்நிலைத் திட்டங்களைத் தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. கல்வி மீதான அக்கறையும் பரிவும் எல்லா நிலைகளிலும் இருப்பதை அது உறுதி செய்து வருகிறது.
அவ்வகையில் JUNIOR SUPERHERO SIMPÁN SSPN என்ற திட்டமானது PTPTN சமூக கார்ப்பரெட் பொறுப்புடைமையின் ஒரு திட்டமாக அமைந்துள்ளது. உலக சேமிப்பு தினத்தை முன்னிட்டு 2023ஆம் ஆண்டு தொடங்கிய இத்திட்டம் 2025ஆம் ஆண்டிலும் தொடர்கிறது.

2025 JUNIOR SUPERHERO SIMPAN SSPN தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனையில் PTPTN தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பகாங் மாநில தேசிய மக்கள், குடும்ப மேம்பாட்டு வாரிய இயக்குநர் புவான் நூர்ஃபார்ஹானா லீ முகமட் ஸுல்கிஃப்ளி லீ, தெங்கு அம்புவான் அப்ஸான் மருத்துவமனை துணை இயக்குநர் (நிர்வாகம்) போனி ஃபேஸ் பாசின் நீரோப், PTPTN உயர் தலைமை நிர்வாகி புவான் வான் ஸாவியா வான் அபுபக்கார், பகாங் PTPTN இயக்குநர் புவான் சபிஸா பிந்தி அஜுஹாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்தின் வழி புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு SIMPAN SSPN PRIME கணக்கு திறப்பதற்கு PTPTN 10,000 ரிங்கிட்டை வழங்கியது. 2025 அக்டோபர் மாதம் பிறந்த 50 குழந்தைகளுக்கு தலா 100 ரிங்கிட் செலுத்தி கணக்குகள் திறக்கப்பட்டது. மேலும் 100 ரிங்கிட் மதிப்பிலான குழந்தைளுக்கான பொருட்கள் அடங்கிய ஹெம்பர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு குவாந்தான் தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனை, பகாங் மாநில சுகாதார இலாகா அணுக்கமான ஒத்துழைப்பை நல்கியது.
PTPTN, பகாங் மாநில அரசாங்கம் 2024ஆம் ஆண்டு இதேபோன்றே ஒரு வியூக ஒத்துழைப்பின் கீழ் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டத்தைத் தொடங்கியது. இதற்கு பகாங் மாநில அரசாங்கம் ஒரு தடவை உதவியாக தலா 300 ரிங்கிட்டை ஒவ்வொரு மலேசிய குழந்தைக்கும் வழங்கியது.

2025இல் பிறந்த மலேசியப் பிரஜை குழந்தைகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது. இதில் 250 ரிங்கிட் சேமிப்புக் கணக்கு திறப்பதற்கு அல்லது வைப்புத் தொகையை அதிகரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. எஞ்சிய 50 ரிங்கிட் குழந்தைகளுக்கான பொருளாக வழங்கப்பட்டது.
2025 செப்டம்பர் மாதம் வரையில் பகாங் மாநிலத்தில் SIMPAN SSPN திட்டத்தின் கீழ் மொத்தம் 387, 408 கணக்குகள் திறக்கப்பட்டு 634. 54 மில்லியன் ரிங்கிட் சேமிக்கப்பட்டிருக்கிறது.
PTPTN தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் (வலமிருந்து மூன்றாவது), புவான் நூர்ஃபர்ஹானா லீ, போனிஃபேஸ் பாஸின் ஆகியோர் கணக்கு திறப்பு பத்திரங்களை காட்டுகின்றனர்.





















