மாசடைந்த மருந்து காரணமாக தாய்லாந்து நிறுவனம் 2 லட்சம் புட்டிகளை திரும்பப் பெறுகிறது

பேங்காக்:

தாய்லாந்தின் பிரபல மருந்து உற்பத்தியாளர் ‘ஹெர்பல் ஹோங் தாய்’ (Herbal Hong Thai) நிறுவனம் தயாரித்த ‘ஹோங் தாய் ஹெர்பல் இன்ஹேலர் ஃபார்முலா 2’ மருந்துப் புட்டிகளில் மாசு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, ஏறத்தாழ 2 லட்சம் புட்டிகளை சந்தையிலிருந்து திரும்பப் பெறும் நடவடிக்கையை அறிவித்துள்ளது.

தாய்லாந்து உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் (FDA) நடத்திய ஆய்வில், அந்த மருந்து நாசித் துவாரங்கள் வழியாக உள்வாங்கிக்கொள்ளப்படும் வகையிலானது என்றும், அதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான நுண்ணுயிர்கள் (microorganisms) இருப்பது தெரியவந்தது. இதனால், அது மனித உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இச்சிக்கல் 2024ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி தயாரிக்கப்பட்டு, 2027ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி வரை காலாவதியாகும் குறிப்பிட்ட சில தொகுப்புகளிலேயே (batches) ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் விளக்கியுள்ளது.

‘ஹெர்பல் ஹோங் தாய்’ நிறுவனத்தின் நிறுவனர் திரு நீராபோங் ராபுவேதம், “எங்கள் நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளுக்கான தரக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காதவாறு உறுதி செய்யப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு பாதிக்கப்பட்ட தயாரிப்பு எண்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும், அந்த மருந்து வைத்திருப்பவர்கள் அவற்றை உடனடியாக திருப்பி வழங்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here