ஜோகூர் மாநில 2026 பட்ஜெட் கல்விக்கு முக்கியத்துவம் பிடிபிடிஎன் பாராட்டு

ஜோகூர் பாரு, 

ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி சட்டமன்றத்தில் தாக்கல் செய்த ஜோகூர் மாநில 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பங்சா ஜோகூர் செஜாத்திரா எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டிருக்கிறது. இந்த பட்ஜெட் ஜோகூர் மக்களின் சுபிட்சத்திற்கும் நலனிற்கும் முக்கியத்துவம் அளிப்பதாக அமைந்திருக்கிறது என்றும் தேசிய உயர்கல்வி நிதிக்கழகத்தின் (பிடிபிடிஎன்) தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

ஜோகூர் பரிவுமிக்க உதவி, ஜோகூர் மாநில ஆதரவற்ற பிள்ளைகளுக்கான உதவி, தேசிய கல்வி சேமிப்புத் திட்டம் ஆகியவற்றுக்கு ஜோகூர் பட்ஜெட் முன்னுரிமை அளித்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

எஸ்எஸ்பிஎன் திட்டத்தின் கீழ் ஒரு மாணவர் 2,000 ரிங்கிட் வரை பெறுவார். இதன்மூலம் ஆதரவற்ற 12,370 மாணவர்கள் நன்மை அடைவார்கள். இதற்கான ஒதுக்கீடு 24. 6 மில்லியன் ரிங்கிட்டாகும்.

3 கட்டமாக இந்தத் தொகை வழங்கப்படும. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 300 ரிங்கிட், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 300 ரிங்கிட், எதிர்கால கல்வி சேமிப்பிற்காக எஸ்எஸ்பிஎன் சேமிப்புக் கணக்கில் 1,400 ரிங்கிட் சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜோகூர் மாநில அரசு கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதை இந்த பட்ஜெட் மூலம் காண முடிகிறது என்று நோர்லிஸா தெரிவித்தார். இந்த பட்ஜெட் ஆதரவற்றவர்களின் நலனை முழுமையாகக் கருத்தில் கொண்டிருக்கிறது. அதுமட்டுமன்றி எதிர்காலக் கல்விக்காக இது சேமிக்கும் கலாச்சாரத்தை விதைத்திருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 சிறு வயதிலேயே கல்விக்கான நிதியைச் சேமிக்கும் பழக்கம் வசதிகுறைந்த மாணவர்களின் நிதிச்சுமையைக் குறைக்கும். இதன்மூலம் கல்வியில் முழுக்கவனம் செலுத்த முடியும் என்றும் அவர் குறிபிபட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here