அமைச்சரவை மாற்றம்: புதிய பட்டியல் இன்று அறிவிக்கப்படலாம் – அன்வார் தகவல்

கோலாலம்பூர் :

மலேசிய அமைச்சரவையில் தற்போது காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான புதிய அமைச்சரவைப் பட்டியல் இன்று (செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 16) அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக, அமைச்சரவை மாற்றம் தொடர்பில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரை இன்று இஸ்தானா நெகாராவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்துப் பேசியிருந்தார் என்று, பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த அறிவிப்பு குறித்துப் பதிவிட்டுள்ளார்.

“மக்களின் நலன்கள் மற்றும் நாட்டின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டு, கவனமாக ஆலோசித்த பின்னரே புதிய நியமனங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்று அன்வார் முன்னதாகக் கூறியிருந்தார்.”

“இன்று மதியம், மடானி அரசாங்க அமைச்சரவை தொடர்பான சிறப்பு அறிவிப்பை வெளியிடுவேன். மடானி அரசாங்கம் தொடர்ந்து நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும், மக்கள் மற்றும் நாட்டின் நல்வாழ்வுக்கான கொள்கை அமலாக்கத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கும்.” என்று இப்பதிவில் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவையின் பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளதால், பெரிய அளவில் மாற்றங்கள் தேவை இல்லை என்று தற்போதைய மதிப்பீடுகள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது அமைச்சரவையில் நான்கு இடங்கள் காலியாக உள்ளன. இந்தத் துறைகள் தற்காலிகமாக மற்ற அமைச்சர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

1.தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர்

2.பொருளாதார அமைச்சர்

3.இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர்

4.முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்

என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here