மஞ்சோங் நகராண்மைக்கழகத்தின் சிறந்த ஊடகவியலாளர் நற்சேவைக்கான பாராட்டு விருது பெற்றார் மக்கள் ஓசை செய்தியாளர் டில்லிராணி முத்து

மஞ்சோங், டிச. 21-

மக்கள் ஓசையின் செய்தியாளர் டில்லிராணி முத்து மஞ்சோங் நகராண்மைக்கழகத்தின் சிறந்த ஊடகவியலாளர் நற்சேவைக்கான பாராட்டு விருதைப் பெற்றார்.

மஞ்சோங் மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் மட்டுமன்றி இம்மாவட்டத்தின் வளர்ச்சியையும், மேம்பாட்டினையும் கருத்தில் கொண்டு மஞ்சோங் நகராண்மைக்கழகம் மேற்கொண்ட, மேற்கொண்டுவரும் பல நனிச்சிறந்த நடவடிக்கைகளையும் முன்னெடுப்புகளையும் மக்கள் ஓசை நாளிதழில் தொடர்ந்து பிரசுரித்த வரும் செய்தியாளர் டில்லிராணியின் நற்சேவையை பாராட்டி இவ்விருதை வழங்கியதாக மஞ்சோங் நகராண்மைக்கழகத்தின் தலைவர் துவான் முகமட் ஃபைசால் ஷா பின் சஃபியான் சூரி தெரிவித்தார்.

மேலும் மஞ்சோங் நகராண்மைக்கழகம், மாநகர் மன்ற நிலையை அடைவதற்கான முயற்சிகளையும் மேம்பாட்டுத் திட்டங்களையும் முன்னெடுத்து வரும் இவ்வேளையில், மஞ்சோங் நகாரண்மைக்கழகத்திற்கு பக்கபலமாக இருப்பதோடு நேரம் காலம் பாராமல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் தகவல்களை கொண்டு சேர்ப்பதிலும்
அக்கறை, உறுதிப்பாடு, மதிப்புமிக்க பங்களிப்புக்கான அங்கீகாரமாகவும் நன்றியாகவும் சிறந்த ஊடகவியலாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் நற்சேவைகளுக்கு இந்த சிறப்பு பாராட்டு விருது வழங்கப்பட்டதென அவர் குறிப்பிட்டார்.


அதோடு மஞ்சோங் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஆதரவு நல்குவதிலும், சமூகங்களை வலுப்படுத்துவதிலும், மாவட்டத்தின் அடையாளத்தையும் தரத்தையும் மேம்படுத்துவதிலும் ஊடகவியலாளர்களின் பங்களிப்புகள் பெரும் அளவில் போற்றக்குரியதாக அமைந்துள்ளது.

இந்த உன்னத முயற்சி மலேசியர்களிடையே அக்கறை, தன்னார்வத் தொண்டு ஆகியத் திறன்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று பெரிதும் நம்புகிறேன். அவ்வகையில் இந்த ஒத்துழைப்பும் ஆதரவும் எதிர்காலத்திலும் தொடர்ந்து நீடிக்க வேண்டும் எனவும் துவான் முகமட் ஃபைசால் ஷா கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் இந்தப் பங்களிப்பைப் பாராட்டும் விதமாகவும், ஊடகவியலாளர்களின் நற்பணியை அங்கீகரிக்கும் அடையாளமாகவும் இந்த சிறப்புப் பாராட்டு விருதை வழங்குவதில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் அவர் கூறினார்.

அவ்வகையில் மஞ்சோங் நகராண்மைக்கழகத்திற்கு தொடர்ந்து ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கி மஞ்சோங் மாவட்ட செய்திகளை
தொடர்ந்து மக்கள் ஓசை நாளிதழில் பிரசுரித்து வரும் டில்லிராணியை சிறந்த நிருபர் என துவான் முகமட் ஃபைசால் ஷா புகழாரம் சூட்டி தமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

சென்ற வியாழக்கிழமையன்று நகராண்மைக்கழகத்தின் மெர்டேக்கா மண்டபத்தில் நடைபெற்ற மஞ்சோங் நகராண்மைக்கழகத்தின் 2025ஆம் ஆண்டு நற்சேவைக்கான பாராட்டு விருது விழாவில் 30 பிரிவுகளைச் சேர்ந்த 101 பேர் விருது பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பேராக் மாநில வீடமைப்பு ஊராட்சித்துறை பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினர் சென்ரியா இங், சிறந்த ஊடகவியலாளர் நற்சேவைக்கான பாராட்டு விருது பெற்ற செய்தியாளர் டில்லிராணிக்கு தம்முடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here